துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கரட்டாம்பட்டியில் இருந்து ஆதனூர் செல்லும் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை எதிரே விவசாய நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள ஒரு வயலில் நேற்று மயில்கள் இறந்து கிடந்தன. இதை பார்த்த அப்பகுதி கிராம மக்கள், ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் முத்துச்செல்வனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கிராம நிர்வாக அலுவலர் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 20 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு விஏஓ முத்துச்செல்வன் தகவல் தெரிவித்தார். இதையடுத்து திருச்சி வனத்துறை வனவர் துளசிமலை சென்று பார்த்தபோது 15 பெண் மயில், 5 ஆண் மயில் இறந்து கிடந்தது தெரியவந்தது.
இதைதொடர்ந்து அரசு கால்நடை மருத்துவர் செந்தில்குமார் சம்பவ இடத்திற்கு வந்து மயில்களின் உடலை உடற்கூராய்வு செய்தார். மேலும் விவசாய நிலத்தில் விஷம் வைத்து மயில்கள் கொல்லப்பட்டதா அல்லது விலங்குகளால் கடித்து மயில்கள் இறந்ததா என்று வனத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.