திருப்பூர் விவேகானந்தா காப்பகம் மூடப்படுகிறது: அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூர் விவேகானந்தா காப்பகம் மூடப்படுகிறது என அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். திருப்பூர் அருகே அவினாசி, பூண்டி ரிங் ரோட்டில் விவேகானந்தா சேவாலயம் என்ற ஆதரவற்ற குழந்தைகள் காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்ட 3 மாணவர்கள் பலியானார்கள். வாந்தி, மயக்கத்துடன் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து இது தொடர்பாக விசாரிக்க 3 குழுக்கள் அமைத்து அமைச்சர் கீதா ஜீவன் உத்தரவிட்டுள்ளார். சமூக நலத்துறை சார்பில் ஒரு குழுவும், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் 2 குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருப்பூர் விவேகானந்தா சேவாலயம் காப்பகத்தில் அமைச்சர்கள் கீதா ஜீவன், சாமிநாதன் ஆய்வு செய்தனர். சமூக நலத்துறை இயக்குனர் வளர்மதி, மூத்த ஐஏஎஸ் அதிகாரி மணிவாசன், ஆட்சியர் வினீத், காவல் ஆணையரும் உடனிருந்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கீதா ஜீவன்; கெட்டுப்போன உணவு உண்டு 3 சிறுவர்கள் இறந்த விவகாரத்தில் திருப்பூர் காப்பகம் மூடப்படுகிறது. சரியான கண்காணிப்பு இல்லாதது, மெத்தனபோக்கு ஆகியவற்றால் இந்த இறப்பு ஏற்பட்டுள்ளது; எனவே இந்த காப்பகம் மூடப்படுகிறது. ஆதரவற்ற குழந்தைகளின் நிலை கண்டு முதலமைச்சர் வருத்தமடைந்தார். இரவு நேரத்தில் காப்பாளர் யாரும் இல்லை.

திருமுருகன்பூண்டியில் உள்ள குழந்தைகள் காப்பகம் பாதுகாப்பற்ற இடமாக உள்ளது. சிறுவர்களை காப்பகத்தில் சரியாக கண்காணிக்கவில்லை. காப்பக நிர்வாக செயல்பாடுகளில் அலட்சியமாக இருந்த காப்பக நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விவேகானந்த சேவாலய காப்பகத்தில் உள்ள சிறுவர்கள் ஈரோட்டில் உள்ள இல்லங்களில் தங்க வைக்கப்படுவார்கள். திமுக சார்பாக உயிரிழந்த 3 சிறுவர்களுக்கு தலா ரூ.1 லட்சம்,பாதிக்கப்பட்ட 11 சிறுவர்களுக்கு தலா ரூ.50,000 நிவாரண நிதியை வழங்கினர் எனவும் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.