கம்பம்: தொடர் விடுமுறை காரணமாக, சுருளி அருவியில் குளிக்க சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். தேனி மாவட்டம், கம்பம் அருகே உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும். இந்த அருவியில் கோடைக்காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் நீர்வரத்து குறையும். இந்த அருவிக்கு தமிழகம் மட்டுமின்றி, கேரளா போன்ற பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் வருவது வழக்கம். சுருளி அருவிக்கு வரும் சுற்றுலாபயணிகளிடம் வனத்துறை சார்பில் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
கடந்த வாரத்தில் பண்டிகை கால விடுமுறை மற்றும் பள்ளி காலாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டதால், சுருளி அருவிக்கு தமிழகத்தில் பல்வேறு ஊர்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப்பயணிகள் குவிந்து உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். கடந்த 3 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப்பயணிகள் வந்து சென்றதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.