புதுச்சேரி: நடைபாதை கடைகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி மற்றும் உழவர்கரை நகராட்சி பகுதிகளில் பலர் நடை பாதைகளை ஆக்கிரமித்து கடை வைத்து வியாபாரம் செய்து வருகின்றனர்.இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துகளை தவிர்க்க, ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் வல்லவன் உத்தரவிட்டார். அதன்பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நடைபாதை ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வருகின்றனர்.அண்ணா சாலையில் உள்ள நடைபாதை கடை ஆக்கிரமிப்புகளை பொதுப்பணித் துறையினர் நேற்று காலை அகற்றினர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபாதை கடை வியாபாரிகள் சி.ஐ.டி.யூ., சங்க நிர்வாகிகளுடன் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.வியாபாரிகளுக்கு ஆதரவாக அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., போராட்டத்தில் ஈடுபட்டு, பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பேசினார். அதிகாரிகள், கலெக்டர் உத்தரவுப்படி ஆக்கிரமிப்பு அகற்றப்படுவதாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் ஊர்வலமாக சென்று வழுதாவூர் சாலையில் உள்ள கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
சங்க நிர்வாகிகளை கலெக்டர் வல்லவன் அழைத்து பேசினார். இதில் நடைபாதை கடைகளை அகற்றவில்லை. சாலைகளில் நிரந்தமாக செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகள் மட்டுமே அகற்றப்பட்டு வருகிறது. நடைபாதை வியாபாரிகள் போக்குவரத்திற்கு பாதிப்பின்றி கடையை வைத்துக்கொள்ளலாம் என கூறினார். அதை தொடர்ந்து வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement