தாய்லாந்தில் வியாழக்கிழமை நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 22 குழந்தைகள் உட்பட சுமார் 36 பேர் உயிரிழந்ததற்கு தாய்லாந்து முழுவதும் வெள்ளிக்கிழமை துக்கம் அனுசரிக்கப்பட்டது.
தாய்லாந்தின் வட கிழக்கு மாகாணமான நாங் புவா லாம்புவின் தலைநகரில் இச்சம்பவம் நடந்தது. காவல் துறையைச் சேர்ந்த முன்னாள் காவலரான பன்யா கம்ராப் என்பவர், குழந்தைகள் காப்பகத்திற்குள் நுழைந்து கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் தாக்குதலில் ஈடுபட்டார். இதில், 22 குழந்தைகள் உட்பட 36 பேர் பலியாகினர். பின்னர், தாக்குதலில் ஈடுபட்ட பன்யா கம்ராப் தனது மனைவி மற்றும் மகனையும் துப்பாக்கியால் சுட்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த நிலையில், பிஞ்சுக் குழந்தைகள் 22 பேர் கொல்லப்பட்டதற்கு தாய்லாந்து முழுவதும் துக்கம் அனுசரிக்கப்பட்டது.
தாய்லாந்து துணை பிரதமர், “இந்த துக்க சம்பவம் தாய்லாந்து மக்கள் மட்டுமல்ல, உலக முழுவதும் உள்ள மக்களை மன அழுத்ததிற்கும், சோகத்திற்கும் தள்ளியுள்ளது” என்றார்.
மீட்புப் பணி தலைவர், “இவ்வாறு நடக்க யாரும் விரும்பமாட்டார்கள். இது விரும்பத்தகாத நிகழ்வு. இறந்த குழந்தை ஒன்று மான்செஸ்டர் கால்பந்து அணியின் ஜெர்சியை அணித்திருந்தது. மற்றொரு குழந்தை கார்ட்டூன் படங்களை அணிந்திருந்தது. நாங்கள் இதற்கு முன்னரும் நிறைய எண்ணிக்கையில் உடல்களை பார்த்திருக்கிறோம். ஆனால் இது அனைத்து சம்பவங்களைவிட வேதனையாக இருந்தது” என்றார்.