“நான் கேட்டபோதே என்னுடன் அனுப்பிருந்தால் என் மகன் உயிரோடாவது இருந்திருப்பான்!" – கதறும் தாய்

திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகமான விவேகானந்தா சேவாலயத்தில் கெட்டுப்போன உணவை உட்கொண்ட 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

செந்தில்நாதன் என்பவர் இந்த காப்பகத்தை பல ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஆயுதபூஜை விடுமுறையையொட்டி, இங்கிருந்த 15 சிறுவர்களில் ஒருவன் மட்டும் ஊருக்குச் சென்ற நிலையில், காப்பகத்தில் 14 சிறுவர்கள் இருந்திருக்கின்றனர்.

குழந்தைகள் காப்பகம்

சிறுவர்கள் சிலருக்கு கடந்த செவ்வாய்க்கிழமை காய்ச்சல் இருந்திருக்கிறது. இதற்காக காப்பக நிர்வாகிகள் மாத்திரை கொடுத்திருக்கின்றனர். மருத்துவமனைக்கு சிறுவர்கள் யாரும் அழைத்துச் செல்லப்படாத நிலையில், புதன்கிழமை கொடுத்த கெட்டுப்போன உணவை உட்கொண்ட சிறுவர்களில் பலருக்கு வாந்தி, பேதி ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் சிறுவர்கள் பாபு, அத்திஷ், மாதேஷ் ஆகியோர் உயிரிழந்துவிட்டனர். கெளதம், மணிகண்டன், விடுதி காவலாளி ஜெயராமன் ஆகியோர் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். மற்ற சிறுவர்கள் உள்நோயாளிகள் பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிகிச்சையில் சிறுவர்கள்

மருத்துவமனை பிரேத பரிசோதனைக் கூடத்தில் வைக்கப்பட்டிருந்த மகன் அத்திஷ் உடலை பெற்றக்கொள்ள கண்ணீருடன் காத்திருந்த தாய் பூங்கொடி நம்மிடம் பேசுகையில்,

“திருப்பூர் வேலம்பாளையத்தில் உள்ள டிசோ என்ற ஆதரவற்றோர் காப்பகத்தில்தான் நான் தங்கிப் படித்தேன். கோவையில் வேலை பார்த்துபோது, விஜய் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. பின்னர் மகன் அத்திஷ் பிறந்தான்.

பூங்கொடி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவர் விஜய் இறந்துவிட்டார். கோவையிலிருந்த எனக்கு சரியான வேலை கிடைக்காததால், வேலை தேடி திருப்பூர் வந்தேன். மகனை சரியாக கவனிக்க முடியாததால், திருமுருகன்பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலயத்தில் முதலில் சேர்த்தேன்.

இரண்டு நாள்கள்தான் அங்கிருந்தான். `எனக்கு இங்கிருக்க பிடிக்கவில்லை’ என்று கூறியதால், அங்கிருந்து அவனை அழைத்து வந்து, நான் வளர்ந்த டிசோ காப்பகத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு முன் சேர்த்தேன். ஆனால், அங்கு மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகக் கூறி என் மகனை விவேகானந்தா சேவாலயாவிலேயே மீண்டும் சேர்த்துவிட்டனர்.

விவேகானந்தா சேவாலயம்

அக்டோபர் 1-ம் தேதி என்னிடம் பேசும்போது, `எனக்கு இங்கு இருக்கப் பிடிக்கவில்லை. சாப்பாடு மிக காரமாக இருக்கிறது. என்னை கூட்டிட்டு போ மா!’ என்றான். விவேகானந்தா சேவாலயா, டிசோ நிர்வாகிகளைத் தொடர்பு கொண்டு என்னுடைய மகனை அழைத்துச் செல்கிறேன் என்றேன்.

ஆனால், அவர்கள் அதற்கு அனுமதிக்கவில்லை. ஒரு வாரத்துக்குள் நல்ல வேலை கிடைத்தபின்னர் மகனை என்னுடனே அழைத்து வந்துவிடலாம் என்று நினைத்திருந்தேன்.

இந்த நிலையில்தான், டிசோ காப்பகத்திலிருந்து வியாழக்கிழமை பிற்பகல் 12 மணியளவில் எனக்கு போன் வந்தது. `உங்கள் மகன் அத்திஷுக்கு உடல்நிலை சரியில்லை. திருப்பூர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்’ எங்க கூறினர். இங்கு வந்து பார்த்தபோது, உயிரற்ற சடலாமக பிரேத பரிசோதனை அறையில் என் மகன் படுக்க வைக்கப்பட்டிருந்தான்.

மரணம்

என் மகனை அழைத்துச் செல்கிறேன் என்று கேட்டபோதே அவனை என்னுடன் அனுப்பிருந்தால் இன்று அவன் உயிரோடாவது இருந்திருப்பான். ஆதரவற்றோர் காப்பகத்தில் வளர்ந்த எனக்கு கணவரும் இறந்துவிட்ட நிலையில் அவன் மட்டுமே வாழ்வின் பிடிப்பாக இருந்தான். இன்று அவனும் இல்லை” என்றார் கண்ணீர் மல்க.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.