திருப்பூரிலிருந்து மீடியாவில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசையில் சென்னைக்கு வந்தவர் லாவண்யா. மாடலிங், நடிப்பு என கலக்கிக் கொண்டிருக்கிறார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் `சிப்பிக்குள் முத்து’ தொடரில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தவிர, வெப்சீரிஸ், படங்கள் என ஓடிக் கொண்டிருக்கிறார். பேட்டிக்காக அவரைச் சந்தித்துப் பேசினோம்.
`வீட்ல ரொம்பவே ஸ்ட்ரிக்ட். அவங்களுக்கு நான் மீடியாத்துறையை தேர்வு செய்தது பிடிக்கல. ஆரம்பத்தில் வீட்ல மாடலிங்கிற்கு என்னை அனுப்பவே மாட்டேன்னு சொல்லிட்டாங்க. ஒவ்வொரு ஷூட்டுக்கும் சண்டை போட்டுத்தான் போவேன். கிட்டத்தட்ட முதல் 5,6 ஷூட்டுக்கு அழுது, அழுது கண்ணெல்லாம் சிவந்து அடம் பிடிச்சு தான் போயிருக்கேன். பண ரீதியா எந்த சப்போர்ட்டும் பண்ணல. கோயம்புத்தூரைச் சுற்றியுள்ள இடம்னா நானே போயிட்டு வந்துடுவேன். ஒரு ஷூட்டுக்காக பாண்டிச்சேரிக்கு போக வேண்டியிருந்தது. எனக்கும், அம்மாவுக்கும் அவங்களே டிக்கெட் போட்டு கொடுத்துட்டாங்க. கடைசி நேரத்தில் அம்மா என் கூட வர மாட்டேன்னு சொல்லிட்டாங்க. பிறகு அழுது கையை அறுத்துப்பேன்னு மிரட்டி அவங்களை கூட்டிட்டு போனேன். அம்மாவுக்கு நான் நடிக்கிறதெல்லாம் பிடிக்கும். இந்த சமூகத்திற்காகத்தான் அவங்க வேண்டாம்னு சொன்னாங்க.
ஜீ தமிழில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்துகிட்டேன். அதுல அம்மா சுற்றுக்காக என் அம்மாவை கூட்டிட்டு வந்திருந்தேன். ரியாலிட்டி ஷோ ஷூட்டிங்னா எவ்வளவு நேரம் ஆகும்னு தெரியும்ல.. ஒரு நாள் முழுக்க எடுத்துட்டு இருந்தாங்க. அப்பதான் நான் எவ்ளோ கஷ்டப்படுறேன்னு நேரடியா அம்மா பார்த்தாங்க. அதுவரைக்கும் நான் ஷூட் இல்லாதப்ப ஜாலியா ஏதோ பண்ணிட்டு இருக்கேன்னு நினைச்சவங்களுக்கு அப்பதான் நான் எவ்ளோ இந்தத் துறையை நேசிக்கிறேங்கிறது தெரிஞ்சது. அன்னைக்கு எனக்கு பீரியட்ஸ் வேற! நம்ம வீட்ல பீரியட்ஸ் வந்துட்டாலே வெளியில எங்கேயும் போக மாட்ட… இப்ப இப்படி ஒர்க் பண்றன்னு சொன்னாங்க. நான் ஆரம்பத்தில் பேங்க்ல வேலைக்கு போயிட்டு இருந்தேன் அது பிடிக்காம எனக்கு பிடிச்ச வேலையை பண்ணனும்னு வெளி வந்துட்டேன். அதனால இது பேங்க் வேலை மாதிரி கிடையாதும்மா நாம நினைக்கிற நேரத்துக்கு லீவு போட்டு போகிறதுக்குன்னு சிரிச்சிட்டே பதில் சொன்னேன். நேரடியா பார்த்ததால அவங்க என்னை புரிஞ்சுக்கிட்டாங்க. அதுக்கப்புறம் என்னை ரொம்ப சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க என்றவரிடம் `சிப்பிக்குள் முத்து’ தொடர் குறித்துக் கேட்டோம்.
என்னோட லைஃப்பை பொறுத்தவரைக்கும் எது வேண்டாம்னு சொல்றேனோ அது ரொம்ப பெஸ்டா அமையும். அப்படித்தான் இந்த சீரியலும். நிறைய சீரியல் ஆஃபர் வந்துச்சு. இந்த சீரியலுடைய கதைக்களம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்ததால ஓகே சொல்லிட்டேன். எனக்கு நிஜ வாழ்க்கையில் ஒரு மாற்றுத்திறனாளியை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. இந்தத் தொடரில் மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு மனைவியா நடிக்கணும்னு சொன்னதும் இதுல நம்மளுடைய நடிப்புத் திறமையை வெளிக்காட்ட முடியுங்கிறதனால செலக்ட் பண்ணினேன்.
நான் நிஜ வாழ்க்கையிலும் `வாணி’ மாதிரிதான். என் அக்காவுக்காக, என் அம்மாவுக்காக நிறைய செய்வேன். எனக்காக செய்ததை விட என் குடும்பத்துக்காக செய்யணும்னு நினைப்பேன். அதனால எங்க வீட்ல ஆரம்பத்துல என் கேரக்டரைப் பார்த்து இயல்பா உன்னோட பொருந்தி இருக்குன்னு சொன்னாங்க. அதுல ரொமான்ஸ் காட்சிகள் வருதுன்னா நான் அம்மாகிட்ட ஃபோன் பண்ணி சொல்லிடுவேன். அவங்க வீட்ல பாட்டியோடு, அப்பாவோடு சேர்ந்து பார்க்கும்போது சரியா அதை ஓட்டிவிட்டு பார்த்துடுவாங்க. இது நடிப்புங்கிறதை இப்ப என் வீட்ல புரிஞ்சுக்க ஆரம்பிச்சிருக்காங்க எனப் புன்னகைத்தவர் தொடர்ந்து பேசினார்.
நான் மாற்றுத்திறனாளி ஒருவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு வீட்ல என் அப்பாகிட்ட சண்டை போட்டிருக்கேன். அதுக்கான காரணம் என்ன தெரியுமா?
சின்ன வயசில நான் பார்த்த ஆண்கள் யாருமே சரியில்லை. அப்ப ஆண்களால சில விஷயங்களை நான் எதிர்கொண்டேன். அதனால எனக்கு ஆம்பளைங்களை சுத்தமா பிடிக்காது. என் காலேஜ்ல ஒரு மாற்றுத்திறனாளி பையனை சந்திச்சேன். அப்பதான் அப்படியான ஒருவரை திருமணம் செய்துக்கணும்னு நினைச்சேன் என்றவர் மீடியாவில் எதிர்கொண்ட அட்ஜெஸ்மெண்ட் சார்ந்த விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
என்கிட்ட அப்ப பைக், கார் கிடையாது. ஒரு ஆடிஷனுக்காக போயிருந்தேன். அங்க போகும்போதே அந்த இடம் சரியில்லைன்னு மனசுல உள்ளுணர்வு சொல்லுச்சு. அதனால கேப் டிரைவர் அண்ணாகிட்ட நான் எக்ஸ்ட்ராவாக காசு கொடுக்கிறேன்.. நீங்க இருந்து என்னை கூட்டிட்டு போயிடுங்கன்னு சொல்லிட்டுதான் அந்த இடத்துக்குள்ள போனேன். அந்த இடம் ரொம்ப இருட்டா இருந்துச்சு. அவங்க வரும்போதே வேற வேற காஸ்டியூம்ல லுக் டெஸ்ட் பண்ணனும்னு சொல்லி 7 காஸ்டியூம் கொண்டு வர சொன்னாங்க. அதனால நான் உள்ள ஒரு கார்மென்ட் போட்டே தான் போயிருந்தேன். டிரஸ் மாத்தும்போது கேமரா இருக்குமோங்கிற எண்ணம் எப்பவும் எனக்கு இருக்கும். கார்மென்ட் போட்டிருந்ததால தைரியமா டிரஸ் மாத்தப் போனேன். அவங்க என்கிட்ட என்னோட கான்டாக்ட் வாங்கிறதுல மட்டும்தான் குறிக்கோளா இருந்தாங்க. அதனால கான்டாக்ட் எதுவும் கொடுக்காம அங்கிருந்து உடனே கிளம்பி போயிட்டேன்.
அதே மாதிரி, நான் வீட்டிலிருந்து வந்து பணரீதியா கொஞ்சம் கஷ்டப்படுறேங்கிறது சிலருக்குத் தெரியும். ஒரு காஸ்டிங் டைரக்டர் எனக்குப் பழக்கம். அவன் என்கிட்ட, `நீ என்கிட்ட மட்டும் கான்டேக்ட்லேயே இரு… 6 மாசத்துல நீ வேற லெவலுக்குப் போவ’ன்னு சொன்னான். அதாவது, 6 மாசம் அவன் கூடவே தங்கி இருக்கணும்னு சொன்னான். அதுமட்டுமில்லாம மீடியாவிலுள்ள 3,4 பொண்ணுங்க பேரை சொல்லி அவங்க ஒண்ணுமே இல்லாம இருந்தாங்க.. இப்ப பாரு.. வீடு, கார்னு எப்படி இருக்காங்கன்னு.. நீயும் அப்படி இருக்கலாம்னு சொன்னான். நான் அவன்கிட்ட எதுவுமே ரியாக்ட் பண்ணவே இல்ல. அவன்கிட்ட நான் ரியாக்ட் பண்ணேன்னா அவன் இந்தப் பொண்ணு தப்புன்னு சொல்லிடுவான். நான் மீடியாவில் என்ட்ரியான நேரம் என்பதால் அதெல்லாம் தேவையான்னு அமைதியா இருந்தேன். அவன் ஒரு ஷூட்டுக்கு காசு போட்டுவிட்டு என்னை வர சொன்னான். அந்த ஷூட்டுக்கு அவன் வரவேண்டிய அவசியமே இல்ல. ஆனாலும், அவன் வந்திருந்தான். என்கிட்ட வந்து என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்றன்னு கேட்டான். அப்பவும் அங்கிருந்து நான் எப்படி பாதுகாப்பா வர்றதுங்கிறதை மட்டும்தான் யோசிச்சேன். அங்கிருந்து பாதுகாப்பா நகர்ந்தும் வந்தேன்! எப்பவுமே நமக்கு நம்ம மட்டும்தான் பாதுகாப்பு!’ என்றார்.