கலிபோர்னியா: பயனர்களின் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை களவாடும் ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் செயலிகள் குறித்த அலர்ட்டை மெட்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த செயலிகள் என்ன மாதிரியான வகையை சேர்ந்தது என்ற விவரத்தையும் மெட்டா தெரிவித்துள்ளது. 10 லட்சம் எண்ணிக்கையிலான பயனர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கூகுள் மற்றும் ஆப்பிள் நிறுவனத்திடம் முன்கூட்டியே தெரிவித்து உள்ளதாகவும், சுமார் 400 செயலிகள் இந்தக் களவுப் பணியை மேற்கொண்டுள்ளதாகவும் மெட்டா தெரிவித்துள்ளது. அதுவும் பயனர்களின் லாக்-இன் மூலம் இந்த விவரம் சேகரிக்கப்படுகிறதாம்.
பெரும்பாலும் இந்த செயலிகள் போட்டோ எடிட்டிங், கேம், விபிஎன் சேவைகள் மற்றும் இன்னும் பிற பயன்பாட்டுக்காக பயனர்கள் பயன்படுத்தி வருபவை என மெட்டா தெரிவித்துள்ளது. மேலும், இது தொடர்பாக கூகுள் மற்றும் ஆப்பிள் வசம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாகவே அந்தச் செயலிகள் அந்தத் தளத்தில் அப்ளிகேஷன் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனை மெட்டா பொறியாளர் ஒருவர் உறுதி செய்துள்ளார். மேலும், பயனர்கள் தேர்ட் பார்ட்டி மூலம் செயலிகளை டவுன்லோட் செய்து பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது மெட்டா.
தங்கள் பயனர் விவரங்கள் களவு போயிருக்கலாம் என சந்தேகிக்கும் பயனாளர்கள் ஃபேஸ்புக் பாஸ்வேர்டை ரீசெட் செய்யுமாறு மெட்டா அறிவுறுத்தியுள்ளது. அதோடு டூ ஃபேக்டர் ஆத்தென்டிகேஷனை பயன்படுத்துமாறும் மெட்டா தெரிவித்துள்ளது. அதற்கு கூகுள், மைக்ரோசாஃப்ட் ஆத்தென்டிகேட்டர் செயலிகளை பயன்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.