சென்னையின் இரண்டாவது விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள பரந்தூரில் அமையவிருக்கிறது என ஆகஸ்ட் 1-ல் மத்திய விமானப் போக்குவரத்துத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், அதிகாரபூர்வமாக அறிவித்தார். புதிய விமான நிலையம் தொடர்பான அறிவிப்புகள் ஆட்சியாளர்கள், தொழில்துறையினர், சென்னைவாசிகள் என பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் விவசாய நிலங்கள், தரிசு நிலத்தில் மேயும் கால்நடைகள், தாமரை ஏரிகள் என விவசாய மண்டலம் போல் இருக்கும் பரந்தூர் ஊராட்சி மக்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இது பற்றி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “வளர்ச்சித் திட்டங்களுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்துவதை அரசு தவிர்க்க வேண்டும் என்று நிலம் கையப்படுத்தும் சட்டத்தின் பிரிவு 10 கூறுகிறது. சட்டத்தில் உள்ள அப்பிரிவின்படி, உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த, விவசாயம் நடைபெறும் எந்த இடத்தையும் ஒரு திட்டத்திற்காகக் கையகப்படுத்தக் கூடாது. பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்படவுள்ள மொத்தமுள்ள 4,563.56 ஏக்கரில் சுமார் 3,246 ஏக்கர் நிலம் விவசாயம் நடைபெறும் நன்செய் ((2,446.79) மற்றும் புன்செய் (799.59) நிலங்களாகும். நெல் விவசாயம் நடைபெறும் இந்நிலத்தை கையகப்படுத்துவதம் மூலம் நம்முடைய உணவு பாதுகாப்பு கேள்விக்கு உட்படுத்தப்படுகிறது. வேறு வழியே இல்லையென்றால் தான் விவசாய நிலத்தை கையகப்படுத்தலாம் என நிலம் கையகப்படுத்தும் சட்டமும், ஒன்றிய அரசின் “புதிய விமான நிலையம் அமைக்கும் வழிகாட்டு நெறிமுறைகளும்(GUIDELINES FOR SETTING UP OF GREENFIELD AIRPORTS)” சொல்கின்றன. ஆனால், இந்த சரத்து “பரந்தூர் விமான நிலையத்திற்கு பொருந்தாது, இதற்கான காரணங்கள்” என்றும் “மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்றும் கோரிக்கை நெடு நாட்களாக நிலுவையில் உள்ளது, அதையும் தரம் உயர்த்தி சர்வதேச “code sharing” கொண்டுவந்துவிட்டால் சென்னைக்கான புதிய விமான நிலையத்தின் தேவை இல்லாமல் போய்விடும். எனவே, சென்னை விமான நிலையத்தை விரிவாக்குவது, அல்லது கோவை, திருச்சி விமான நிலையங்களை விரிவாக்குவது, அல்லது மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அங்கீகாரத்தைப் பெறுவது போன்ற வாய்ப்புகள் தமிழக அரசிடம் உள்ளது. மேலும் சென்னையை மட்டுமே மையப்படுத்தப்பட்ட வளர்ச்சி என்பது சரியான நிலையும் அல்ல” என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், `காலநிலை மாற்றம் இன்று மானுட இருத்தியலை கேள்விக்கு உட்படுத்தியுள்ளது, சூழலைக் காப்பது, உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்வது, நீர்நிலைகளை பாதுகாப்பதுதான் இன்றைய நிலையில் தலையாய கடமை. இந்தப் பின்னணியில், அரசு பரந்தூரில் அமைக்கத் திட்டமிட்டுள்ள உள்ள `Greenfield’ விமான நிலையத் திட்டத்தை கைவிட்டுவிட்டு மாற்றுவழிகளை முன்னெடுக்கவேண்டும் என, அந்த திட்டத்தால் பல்லாயிரக்கணக்கில் பாதிக்கப்படப்போகும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் சார்பில் பூவுலகின் நண்பர்கள் கேட்டுக்கொள்கிறோம்” என்று பூவுலகின் நண்பர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.