சென்னையில் பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது என்றும், மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை ராயபுரத்தில் போஜராஜன் நகருடன் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் 13.4 கோடி செலவில் ரயில்வே பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா வண்ணாரப்பேட்டையில் பெற்றது. அதில் அமைச்சர்கள் கே என் நேரு, சேகர் பாபு, மேயர் பிரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 18 மாதத்தில் கட்டி முடிக்கப்பட உள்ளதாக கூறப்படும் இந்த ரயில்வே சுரங்க பாலத்தால் பழைய வண்ணாரப்பேட்டை, மண்ணடி மற்றும் பேசன் பிரிட்ஜ் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கே.என். நேரு, ரயில்வே தரப்பில் சுரங்கப்பாதை முடிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் பல ஆண்டுகள் கோரிக்கைக்கு ஏற்ப, முதலமைச்சர் ஆணைக்கு ஏற்ப ராயபுரத்தில் போஜராஜன் நகருடன் கண்ணன் தெருவை இணைக்கும் வகையில் ரயில்வே பாலம் 13.40 கோடி மதிப்பில் அமைக்கப்படவுள்ளது. 18 மாதத்தில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்.
சென்னையில் பருவமழைக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 741 மோட்டார் பம்புகள் தயார் நிலையில் உள்ளது. 34 இடங்களில் ரெடிமேட் கான்கிரீட் முறையில் மழைநீர் வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து இடங்களிலும் ரெடிமேட் கான்கிரீட் முறையில் அமைப்பது தொழில்நுட்ப ரீதியாக சிக்கல் உள்ளது. மழை பெய்தால் எந்த அளவிலும் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM