ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது.
ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து ஹைதராபாத்தை தலைநகரமாக கொண்டு தனி தெலங்கானா மாநிலம் உருவானது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற 2 சட்டப்பேரவைத் தேர்தல்களிலும், டிஆர்எஸ் கட்சி வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. ஆனால், தற்போது பாஜக அங்கு கால் ஊன்ற தொடங்கி விட்டது.
கடந்த 3 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆளும் கட்சிக்கு அதிர்ச்சியை கொடுத்தனர். முஸ்லிம் வாக்குகள் அதிகம் உள்ள ஹைதராபாத் மாநகராட்சியில் கூட 46 வார்டுகளில் வெற்றி பெற்று, பலம் பொருந்திய கட்சி வரிசையில் பாஜக 2-ம் இடம்பிடித்தது. அப்போதில் இருந்தே முதல்வர் சந்திரசேகர ராவ், பாஜகவை எதிர்க்க தொடங்கினார். அசாதுதீன் ஒவைசி தலைமையிலான ஏஐஎம்ஐஎம் கட்சியிடம் நெருங்கி வரத் தொடங்கினார்.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத 3வது அணியை தேசிய அளவில் உருவாக்கும் முயற்சியை சந்திரசேகர ராவ் மேற்கொண்டு வருகிறார். இதற்காக பாஜக.வை நேரடியாக எதிர்க்கும் வகையில், வேளாண் பிரச்சினைக்காக டெல்லியில் போராட்டம் நடத்தினார்.
பிரதமர் மோடியை தீவிரமாக விமர்சித்தார். மோடியை எதிர்ப்பவர்களிடம் நட்பு பாராட்ட தொடங்கினார். இறுதியில் தேசிய அரசியலில் குதிக்க தீர்மானித்தார். அதற்காக பிரதமர் மோடிக்கு எதிராக உள்ள மாநில கட்சித் தலைவர்கள், முதல்வர்கள் உட்பட பலரையும் அவர் சந்தித்து பேசி வருகிறார்.
இந்நிலையில், நேற்று ஹைதராபாத்தில் உள்ள தெலங்கானா பவனின் நடந்த கட்சியின் உயர் மட்ட செயற்குழு கூட்டத்தை கூட்டி, தனது கட்சியின் பெயரை பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) என்று மாற்றுவதாக தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார்.கட்சியின் பெயர் மாற்றம் குறித்து மத்திய தேர்தல் ஆணையத்துக்கு சந்திரசேகர ராவ் கடிதம் எழுதி உள்ளார்.
சந்திரபாபு நாயுடு சிரிப்பு
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, நேற்று தனது மனைவி புவனேஸ்வரியுடன் விஜயவாடா கனக துர்கையம்மன் கோயிலுக்கு தாயாரை தரிசிக்க வந்தனர். அப்போது, அங்கிருந்த செய்தியாளர்கள், சந்திரசேகர ராவ் தனது டிஆர்எஸ் கட்சியை தேசிய கட்சியாக மாற்றியுள்ளது குறித்து நாயுடுவிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு, சந்திரபாபு, ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாக தந்து அங்கிருந்து சென்றுவிட்டார்.