பாலக்காடு அருகே பயங்கர விபத்து: ஊட்டிக்கு சுற்றுலா வந்த மாணவர்கள் உள்பட 9 பேர் சாவு

பாலக்காடு,

இந்த கோர விபத்து குறித்த தகவல்கள், நெஞ்சை நொறுக்கு வதாக அமைந்துள்ளன. அவை வருமாறு:-

ஊட்டிக்கு சுற்றுலா

கேரள மாநிலம், எர்ணாகுளம் பள்ளுருத்தி பேசிலோஸ் வித்யநிகேதன்பள்ளிக்கூடத்தில் இருந்து, எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகள் 42 பேர், 5 ஆசிரியர்கள் நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு தமிழ்நாட்டில் உள்ள ஊட்டிக்கு ஒரு தனியார் பஸ்சில் உல்லாச சுற்றுலா புறப்பட்டனர்.

பஸ்சை டிரைவர் ஜோமோன் ஓட்டினார். ஒரு உதவி டிரைவரும் உடன் இருந்தார். ஊட்டியை உற்சாகமாக வலம் வரலாம் என கனவுகளுடனும், கற்பனைகளுடனும் பயணம் செய்தவர்களுக்கு ‘இன்னும் சிறிது நேரத்தில் நாம் ஒரு கோர விபத்தை சந்திக்கப்போகிறோம்’ என்பது தெரிந்திருக்க நியாயம் இல்லை.

அந்தப் பஸ் பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி அருகே உள்ள அஞ்சுமூர்த்திமங்கலம் பகுதியில் நள்ளிரவு ஒரு மணிக்கு வந்து கொண்டிருந்தது. அந்த சுற்றுலா பஸ்சிற்கு முன்பாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே உள்ள கொட்டாரக்கரா பகுதியில் இருந்து கோவையை நோக்கி கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. அந்த பஸ்சில் 45 பயணிகள் இருந்தனர்.

அரசு பஸ்சுடன் மோதல்

வடக்கஞ்சேரி அருகே சுற்றுலா பஸ் டிரைவர், ஒரு காரை முந்தி செல்வதற்காக பஸ்சை வேகமாக ஓட்டியபோது, எதிர்பாராதவிதமாக அது கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ்சின் பின்பக்கத்தில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ் அருகில் உள்ள பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த கோர விபத்தில் சுற்றுலா பஸ் உருக்குலைந்து போனது. அந்தப் பஸ்சிற்குள் சிக்கிக்கொண்ட மாணவ-மாணவிகள் படுகாயம் அடைந்து, கூக்குரல் எழுப்பியபடி உயிருக்கு போராடினார்கள்.

அதேநேரத்தில் சுற்றுலா பஸ் மோதியதில் கேரள அரசு பஸ்சின் பின் பகுதி பலத்த சேதமடைந்து, பின் இருக்கையில் அமர்ந்து இருந்த பயணிகள் பலர் பலத்த காயம் அடைந்தனர். அந்த வழியே சென்ற பிற வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மின்னல் வேகத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்து குறித்து வடக்கஞ்சேரி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

9 பேர் பரிதாப சாவு

இதையடுத்து ஆலத்தூர் மற்றும் வடக்கஞ்சேரி போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் இறங்கினர். சுற்றுலா பஸ் உருக்குலைந்து காணப்பட்டதாலும், மழை பெய்து கொண்டிருந்ததாலும் பஸ்சிற்குள் சிக்கியவர்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. 2 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பஸ்சிற்குள் சிக்கி இருந்த மாணவ-மாணவிகள், ஆசிரியர்கள் ஒவ்வொருவராக மீட்கப்பட்டு வடக்கஞ்சேரி, ஆலத்தூர் மற்றும் பாலக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டவர்களில் சிகிச்சை பலனின்றி பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விஷ்ணு (வயது 33), பிளஸ்-2 மாணவர்கள் அஞ்சனா அஜித் (17), இமானுவேல் (17), எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் கிறிஸ் விண்டர்பான் தாமஸ் (15), திவ்யா ராஜேஷ் (15), எல்னா ஜோஸ் (15) ஆகிய 6 பேரும், கேரள அரசு பஸ்சில் பயணம் செய்த கூடைப்பந்து வீரர் ரோகித் ராஜ் (24), கொல்லத்தை சேர்ந்த அனூப் (22), திருச்சூரைச் சேர்ந்த நானஸிஜோஸ் (31) என 9 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

7 பேர் கவலைக்கிடம்

இந்த கோர விபத்தில் எண்டோஸ் (பிறவம்), முகமது காசிம் (பந்தளம்) , மனோஜ்(கல்லே பள்ளி), பிரவீன் பர்கீஸ் (திருப்பூர்), விஷ்ணு(மூவாட்டுபுழா), பொண்ணானியை சேர்ந்த அப்துல், ஹரி கிருஷ்ணா (22), அனனியா (18), அமேயா (17), அனுஜா (17), அருண்குமார் (38) என 40-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதில் பாலக்காடு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டவர்களில் 7 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து தகவல் அறிந்த மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் ஆஸ்பத்திரிகக்கு விரைந்து வந்தனர். பலியான பிள்ளைகளின் உடல்களை பார்த்து, அவர்களது பெற்றோர் கதறி அழுதது காண்போரை கண்கலங்க வைத்தது.

பலியான 4 பேரின் உடல்கள் பாலக்காடு மாவட்ட ஆஸ்பத்திரியிலும், 5 பேரது உடல்கள் ஆலத்தூர் தாலுகா ஆஸ்பத்திரியிலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டன.

பள்ளியில் அஞ்சலி

அதன்பின்னர், 9 பேரின் உடல்களும் எர்ணாகுளம் பள்ளுருத்தி பேசிலோஸ் வித்யநிகேதன் பள்ளிக்கூடத்துக்கு நேற்று மாலை 3 மணிக்கு எடுத்து வரப்பட்டன. அங்கு கேரள மந்திரிகள் ஆண்டனி ராஜூ, பி.ஏ. முகமது ரியாஸ், சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சதீசன் மற்றும் பல்வேறு பிரமுகர்கள், ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். பலியான அனைவரும் முலந்துருத்தி, திருவானியூர் பகுதியை சேர்ந்தவர்கள் என்பதால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

எல்னா ஜோஸ் தவிர்த்து மற்றவர்களுடைய இறுதிச்சடங்கு மாலையில் நடந்தது. எல்னா ஜோஸ் இறுதிச்சடங்கு இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

கேரள ஐகோர்ட்டு நடவடிக்கை

இந்த விபத்து குறித்து கேரள ஐகோர்ட்டு நடவடிக்கையில் இறங்கியது. விபத்து பற்றி போலீசிடமும், மோட்டார் வாகன துறையிடமும் அறிக்கை அளிக்குமாறு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

ஒளிரும் லேசர் விளக்குகள், தடை செய்யப்பட்ட ‘ஹாரன்’கள் கொண்ட பஸ்சுக்கு தகுதிச்சான்றிதழ் வழங்கப்பட்டது எப்படி என அவர் கேள்வி எழுப்பினார். வாகனங்களில் ஒளிரும் லேசர் விளக்குகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஹாரன்களை பயன்படுத்தக்கூடாது, அவற்றை பயன்படுத்துவோரை கைது செய்ய வேண்டும் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

அதிவேகமாக ஓட்டிய டிரைவர் கைது

விபத்துக்கு காரணமாகி, பின்னர் தலைமறைவாகி விட்ட சுற்றுலா பஸ் டிரைவர் ஜோமோன், கொல்லம் சவரா பகுதியில் நேற்று மதியம் கைது செய்யப்பட்டார். அவர் திருவனந்தபுரத்துக்கு வக்கீலை சந்திப்பதற்காக ஒரு காரில் சென்றபோது, அவரது செல்போன் சமிக்ஞையை வைத்து கண்டுபிடித்து போலீசார் கைது செய்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

விபத்துக்குள்ளானபோது சுற்றுலா பஸ்சினை அவர் மணிக்கு 97.7 கி.மீ. வேகத்தில் சென்றதாக ஜி.பி.எஸ். தரவுகள் தெரிவிக்கின்றன. இது தொடர்பான அறிக்கையை பாலக்காடு ஆர்.டி.ஓ., மாநில போக்குவரத்து கமிஷனரிடம் அளித்துள்ளார்.

இந்த விபத்து கேரள மாநிலத்தையே உலுக்கி உள்ளது.

ஜனாதிபதி இரங்கல்- பிரதமர் நிதி உதவி

இந்த கோர விபத்தில் பலியானோருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு அனுதாபம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்ட பதிவில், ” கேரள மாநிலம், பாலக்காட்டில் நடந்துள்ள நெஞ்சை உலுக்கும் துயர விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்தேன். இந்த விபத்தில் விலை மதிக்க முடியாத உயிர்களை பள்ளிக்குழந்தைகள் மற்றும் பிறரும் இழந்துள்ளனர். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கிறேன். காயம் அடைந்தவர்கள் விரைவில் குணம் அடைய பிரார்த்திக்கிறேன்” என கூறி உள்ளார்.

இதே போன்று விபத்தில் பலியானவர்களுக்கு பிரதமர் மோடியும் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு பிரதம மந்திரி தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ.2 லட்சமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் இழப்பீடு வழங்கப்படும் என பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும், பலியானவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.