மதுரை: பாலியல் வழக்கில் கைதான அரசுப் பள்ளி ஆசிரியருக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே குண்ணாக்கவுண்டம்பட்டியைச் சேர்ந்த அறிவியல் ஆசிரியர் மருதை (59). இவர் பொம்மநாயக்கன்பட்டி அரசு உயர் நிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்தார்.
பள்ளி மாணவ, மாணவிகளை அடித்து துன்புறுத்தியும், பாலியல் தொல்லை அளித்ததாகவும் மருதை மீது பள்ளியின் தலைமை ஆசிரியர் போலீஸில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து மருதை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் ஜாமீன் கேட்டு மருதை உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார். இதனை நீதிபதி தமிழ்செல்வி விசாரித்தார்.
அப்போது அரசு தரப்பில், “பள்ளியில் 9-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மனுதாரர் பாலியல் தொல்லை அளித்ததாக புகார் வந்துள்ளது. போலீஸார் விசாரித்து வருகின்றனர்” எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, “மனுதாரருக்கு 59 வயதாகிறது. அவர் 30 ஆண்டுகளாக பள்ளியில் எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல் பணிபுரிந்து வருகிறார். தற்போது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மனுதாரருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது. அவர் சேலத்தில் தங்கியிருந்து சேலம் நகர் காவல் நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும். மனுதாரர் மாணவர்களை சந்தித்து பேசக் கூடாது, சாட்சியங்களை கலைக்கும் நோக்கத்தில் செயல்படக் கூடாது” என உத்தரவிட்டார்.