புதுடெல்லி: நாடு முழுவதும் பிஎஃப்ஐ அமைப்பின் நிர்வாகிகள் வீடு, அலுவலகங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத் துறை அண்மையில் சோதனை நடத்தியது. இதன் அடிப்படை யில் பிஎஃப்ஐ மற்றும் அது சார்ந்த 8 அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.
பலர் கைது செய்யப்பட்டனர். சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்டத்தின் கீழ் 1,400-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் பிஎஃப்ஐ தொடர்பான சட்டவிரோத செயல்கள் தடுப்பு சட்ட தீர்ப்பாயத்தின் தலைவராக நீதிபதி தினேஷ்குமார் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வருகிறார். பிஎஃப்ஐ மீதான தடை குறித்து தீர்ப்பாயம் விசாரித்து முடிவை அறிவிக்கும்.
இதுகுறித்து மத்திய உள்துறை வட்டாரங்கள் கூறியதாவது:
கடந்த 28-ம் தேதி பிஎஃப்ஐ மற்றும் அதுதொடர்புடைய அமைப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடை நியாயமானதா என்பது குறித்து விசாரிக்க தற்போது உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் தீர்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்த 6 மாதங்களில் தீர்ப்பாயத்தின் விசாரணை நிறைவுபெறும்.
போதிய ஆதாரங்கள் இருந்தால் பிஎஃப்ஐ மீதான தடை உறுதி செய்யப்படும். ஆதாரங்கள் இல்லை என்று கருதினால் தடையை தீர்ப்பாயம் ரத்து செய்யும். இவ்வாறு உள்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.