ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி இன்னும் முடியாமல் தொடர்கிறது. உக்ரைனின் நான்கு நகரங்களைக் கைப்பற்றிய ரஷ்யா அவற்றைத் தன்னுடன் இணைத்துக்கொண்டதாக அறிவித்தது. மேலும், தேவை ஏற்பட்டால் அணு ஆயுதத்தையும் பயன்படுத்துவோம் எனவும் எச்சரித்திருக்கிறது ரஷ்யா. இந்த நிலையில், சிட்னியிலுள்ள லோவி இன்ஸ்டிடியூட் சர்வதேச சிந்தனைக் குழுவில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உரையாற்றினார்.
அப்போது அவரிடம் அணு ஆயுதப் போரின் அபாயம் அதிகரித்துள்ளதா எனக் கேட்கப்பட்டதற்கு பதிலளித்த அவர், “இந்த கேள்விக்கு பதில் சொல்லுவது கடினம். ரஷ்யர்களுக்கு தங்கள் நாட்டில் நடப்பவற்றைக் கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கிறது. அணு ஆயுதத் தாக்குதலுக்கு ரஷ்யா தயாரானால், உலகம் ஒருபோதும் அதை மன்னிக்காது என்பதை புதின் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார். அணு ஆயுதங்களைப் பயன்படுத்திய பிறகு, அவர் தன் உயிரைக்கூட பாதுகாக்க முடியாது என்பதை அவர் புரிந்துகொண்டிருக்கிறார், மேலும் நான் அதில் உறுதியாக இருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
கடந்த வாரம் நேட்டோ அமைப்பின் பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் செய்தியாளர்களிடம், “உக்ரைன் மோதலில் தேவைப்பட்டால் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தவும் தயங்கப் போவதில்லை என ரஷ்ய அதிபர் புதின் எச்சரித்திருக்கிறார். ரஷ்யா உக்ரைனில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்தினால், அவர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும். ரஷ்யா 4 உக்ரேனிய பிராந்தியங்களை முறைப்படி இணைப்பதாக அறிவித்திருக்கிறது.
ரஷ்யா சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறி உக்ரைன்மீது திணிக்கப்பட்ட இந்த நில அபகரிப்பு சட்டவிரோதமானது. நேட்டோ நாடுகளின் கூட்டமைப்ப்பு இந்த பிராந்தியங்களில் எதையும் ரஷ்யாவின் ஒரு பகுதியாக அங்கீகரிக்கவில்லை. மேலும், அங்கீகரிக்கவும் மாட்டோம். ரஷ்யா சண்டையை நிறுத்தினால், போர் இருக்காது. உக்ரைன் சண்டையை நிறுத்தினால் – உக்ரைன் இல்லாமல் போகும்” எனத் தெரிவித்தது குறிப்பிடதக்கது.