புராதன மதராசாவில் இந்து வழிபாடு விவகாரம்! பூட்டை உடைத்தவர்களை தேடும் போலீசார்

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில், 550 ஆண்டுகள் பழமையான மதரஸாவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த கும்பல், வழிபாடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த விவகாரத்தில், 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வகுப்புவாத பதற்றம் நிலவி வரும் சூழ்நிலையில் தற்போது காவல்துறை இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். தசரா தினத்தன்று, 550 ஆண்டுகள் பழமையான வரலாற்று மதரஸாவிற்குள் ஒரு கும்பல் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து, வழிபாடு நடத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, வழக்குப் பதிவு செய்த உள்ளூர் போலீசார் 9 பேரை முக்கிய குற்றவாளிகளாக அறிவித்து, அதில் 4 பேரை கைது செய்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பிதார் மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் மாநிலம் முழுவதிலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 550 ஆண்டுகள் பழமையான மதரஸாவுக்குள் அத்து மீறி நுழைந்த கும்பல், இந்து முறைப்படி வழிபட்டனர்.

வைரலான வீடியோவால் பதற்றமும் அதிகரிப்பு
இந்த சம்பவத்தின் வீடியோவும்
சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மதரஸா படிக்கட்டில் நின்று கொண்டு சிலர் “ஜெய் ஸ்ரீராம்”, “இந்து தர்ம ஜெய்” என முழக்கங்களை எழுப்பியதாக தெரிகிறது. இருப்பினும், இந்த வீடியோ இன்னும் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் மூலம் உறுதிப்படுத்தப்படவில்லை.

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், தப்பியோடிய மற்ற குற்றவாளிகளை தேடும் பணியும் வேகமாக நடைபெற்று வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

ஓவைசி கண்டனம்

இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் போலீசார் தேடி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த விஷயத்தில், மாநில பாஜக அரசாங்கத்தை எதிர்க்கட்சிகள் தாக்கி வருகின்றன. AIMIM  கட்சியின் நாடாளுமன்ற எம்.பி., அசாதுதீன் ஒவைசி பாஜகவுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் உள்ள பா.ஜ., அரசை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அவர், வரலாற்று சிறப்புமிக்க மதரஸாவை களங்கப்படுத்த மத்திய மாநில அரசுகள் முயற்சி மேற்கொள்வதாக குற்றம் சாட்டினார்.

கர்நாடக மாநிலத்தின் பசவராஜ் பொம்மை அரசை தாக்கி பேசிய ஓவைசி, “இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தும் வகையில் மாநில பாஜக அரசு இதுபோன்ற சம்பவங்களை ஊக்குவிக்கிறது. தீவிரவாதிகள் மதரசா அமைந்திருக்கும் வளாகத்தின் பூட்டை உடைத்து, வரலாற்று சிறப்புமிக்க மஹ்மூத் கவான் மசூதியை இழிவுபடுத்தியுள்ளனர். கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை இதை எப்படி அனுமதித்தார்? முஸ்லிம்களை இழிவுபடுத்துவதற்காகவே பாஜக இது போன்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்கிறது” என்று குறிப்பிட்டார்.

550 ஆண்டுகள் பழமையான மதரஸா
மஹ்மூத் கவானின் மதரஸா என்று கூறப்படுகிறது.இந்திய தொல்பொருள் ஆய்வு (ASI) படி இது பாரம்பரிய சின்னங்களின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் கர்நாடக அரசு மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.

தசரா அன்று இரவு 2 மணியளவில் மதரஸாவிற்கு வெளியே கூட்டம் கூடியதாக, மதரஸாவுடன் தொடர்புடையவர்கள் மற்றும் சிறுபான்மை சமூகத்தினர் குற்றம் சாட்டுகின்றனர். கூட்டத்தில் இருந்தவர்கள் முதலில் பூட்டை உடைத்து உள்ளே வந்து  வழிபட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.