வடகிழக்கு பருவமழை வந்தாலே சென்னை தத்தளிக்க ஆரம்பித்து விடும். கடந்த சில ஆண்டுகளில் சென்னைவாசிகள் பெற்ற அனுபவம் இதைத்தான் சொல்கின்றன. இந்த ஆண்டாவது அப்படி எதுவும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமா திமுக அரசு? என்ற கேள்வி பலரது மனங்களில் தோன்றி மறைவதை தவிர்க்க முடியவில்லை. பருவமழைக்கு முன்பாகவே ஆலோசனைக் கூட்டம் நடத்தி மழைநீர் வடிகால் பணிகளை சென்னை மாநகராட்சியும், தமிழக அரசும் முடுக்கி விட்டது. இதற்கான பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இங்கு தான் சிக்கலே ஆரம்பமாகிறது. அதாவது, சென்னை மாநகரின் கால்வாய்கள் மற்றும் ஆறுகள் வெள்ளத்தை சமாளிக்கும் அளவிற்கு தயாராகவில்லையாம். இதுதொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு வாரங்களில் தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆனால் தற்போதே மழையின் தாக்கம் தொடங்கிவிட்டது. இந்நிலையில் சென்னையின் முக்கிய ஆறுகளான அடையாறு, கூவம், கொசஸ்தலை மற்றும் முக்கிய கால்வாய்களான பக்கிங்ஹாம், விருகம்பாக்கம், ஓட்டேரி நல்லா ஆகியவற்றில் நீர் தாவரங்கள் ஏராளமாக முளைத்து காணப்படுகின்றன. கழிவுநீர் கலப்பால் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது. ஆக்கிரமிப்புகளும் சூழ்ந்து கொண்டு சிக்கலில் தள்ளி விட்டிருக்கின்றன.
வழித்தடங்களில் ஏராளமான தடைகளும் தென்படுகின்றன. டைம்ஸ் ஆப் இந்தியா மேற்கொண்ட கள ஆய்வில், அடையாறு கஸ்தூரிபாய் நகரின் அருகேவுள்ள பக்கிங்ஹாம் கால்வாயில் களைச் செடிகள் முளைத்து கிடக்கின்றன. இதேபோல் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள அடையாறு ஆற்றில் நீர் பதுமராகம் தாவரங்கள் முளைத்து காணப்படுகின்றன. மேலும் மதுரவாயல் கூவம் ஆற்றிலும் இத்தகைய நிலை தான் இருக்கிறது.
விருகம்பாக்கம் மற்றும் ஓட்டேரி நல்லா கால்வாயில் குப்பைகள் மிதந்து கொண்டு நீர்வழித்தடத்தில் தடைக் கற்களாக உள்ளன. இதற்கான சீரமைப்பு வேலைகள் ஓராண்டாகவே நீர்வளத்துறை சார்பில் மேற்கொள்ளப்படவில்லை என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்காக 15 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது தனிக்கதை. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் நீர்த் தாவரங்களை அகற்றுவதற்கு இயந்திரங்களை வரவழைத்து வேலைகள் தொடங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணிகள் முழுதாக முடிவடைந்தால் தான் வெள்ளத்தில் இருந்து தப்பிக்க முடியும். ஏனெனில் பிரதான நீர் வழித்தடங்களாக இருப்பவை ஆறுகள், கால்வாய்களும் தான். இதுதொடர்பாக நீர்வளத்துறை மேலாண் பொறியாளர் முத்தையாவிடம் கேட்கையில், ஆறுகளை தூர்வார 100 கோடி ரூபாய் நிதி தேவைப்படுகிறது. இது இன்னும் ஒதுக்கப்படவில்லை. ஒருவேளை தூர்வாரும் பணிகளில் இறங்கினாலும் அவற்றை எங்கே கொட்டுவது? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
தற்போது நீர் பதுமராகம் தாவரங்களை அகற்றும் பணிகள் 10 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையின் 31 இடங்களில் நடந்து வரும் பணிகள் அக்டோபர் 10ஆம் தேதி முடிவடைந்து விடும் என்று நம்பிக்கை தெரிவித்தார். இதற்கிடையில் குடியிருப்புகளில் இருந்து கழிவுகளை வெளியேற்றுவதில் முறையான திட்டமிடல் இல்லாததால் ஆறுகளில் சென்று கலக்கும் நிலை ஆங்காங்கே காணப்படுகிறது. இதுவும் நீர்நிலைகளின் போக்கை பெரிதும் பாதிக்கும் என்று எச்சரிக்கின்றனர்.
ஒட்டுமொத்தமாக மாநகராட்சியின் பல்வேறு துறைகளுக்கு இடையில் போதிய ஒத்துழைப்பு இல்லை எனத் தெரிகிறது. இவ்வளவு சிக்கல்கள் இருப்பதால் கடந்த ஜனவரி முதலே பணிகளை படிப்படியாக தொடங்கி இந்நேரம் முடிவுக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள். அப்படியென்றால் வடகிழக்கு பருவமழையை சென்னை தாங்குமா? அதற்குள் ஏதாவது செய்து பிரச்சினை வராமல் பார்த்துக் கொள்வார்களா? என்ற கேள்வி எழுகிறது.