பாலிவுட் முன்னணி நடிகர்களில் ஒருவர் சைஃப் அலி கான். இவர் நடிகை கரீனா கபூரின் கணவரும்கூட. இவர் கிருத்திக் ரோஷனுடன் இணைந்து நடித்த விக்ரம் வேதா ஹிந்தி ரீமேக் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. படத்தை தமிழில் இயக்கிய புஷ்கர் காயத்ரியே இயக்கியிருந்தனர். பாலிவுட்டில் வெளியான படங்கள் சமீபமாக படுதோல்வியை சந்தித்துவரும் சூழலில் இந்த வெற்றி பாலிவுட் திரையுலகில் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. விக்ரம் வேதா படத்துக்கு பிறகு சைஃப் அலி கான் ஆதிபுருஷ் படத்தில் நடித்திருக்கிறார்.
ராமாயணட்த்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தை ஓம் ராவத் இயக்கியிருக்கிறார். தெலுங்கின் முன்னணி நடிகரான பிரபாஸும் இதில் நடித்திருக்கிறார். அவர் ராமர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் போஸ்டரும், டீசரும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. போஸ்டரையும் டீசரையும் பார்த்த ரசிகர்கள் கிராஃபிக்ஸ் படுமோசமாக இருப்பதாக ரசிகர்கள் விமர்சனம் செய்தனர். மேலும் விளம்பர படங்களில் வரும் கிராஃபிக்ஸ் காட்சிகளே ஆதிபுருஷ் கிராஃபிக்ஸைவிட சிறந்ததாக இருந்ததென்று கடுமையாக ட்ரோலும் செய்தனர்.
இதையடுத்து பேசிய படத்தின் இயக்குநர் ஓம் ராவத், ஆதிபுருஷ் குறித்த கேலியான பதிவுகளைப் பார்த்து நான் கவலைப்படவில்லை. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் 3D என பெரிய திரைக்காக எடுக்கப்பட்டது. அதில் பார்க்கும்போது கிராபிக்ஸ் (VFX) காட்சிகளின் தரத்தை உணரலாம். அந்த தரத்தை மொபைல் ஃபோனில் பார்க்க முடியாது. என்னைக் கேட்டால் படத்தின் காட்சிகள் மற்றும் டீசரை யூட்யூபில் பதிவிட வேண்டாம் என்றுதான் நான் சொல்வேன். ஆனால் இன்றைய காலகட்டத்தில் படம் மக்களிடம் போய் சேர வேண்டும் என்பதால் இதை நாங்கள் செய்யவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்” என கூறியிருந்தார்.
இந்நிலையில், சைஃப் அலி கான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், “இந்திய இதிகாசங்களில் ஒன்றான மகாபாரதத்தை யாராவது ‘லார்ட் ஆப் ரிங்ஸ்’ திரைப்படம்போல் பிரமாண்டமாக எடுத்தால் அதில் கண்டிப்பாக நான் நடிப்பேன். இது குறித்து நடிகர் அஜய் தேவ்கானுடன் ‘கச்சே தாகே’ திரைப்படத்தில் நடிக்கும்போதே கலந்துரையாடியிருந்தேன். ‘இது எங்கள் தலைமுறையின் கனவுப் படம்’ பாலிவுட் சினிமாவாக இருந்தாலும் சரி, தென்னிந்திய சினிமாவாக இருந்தாலும் சரி இதுபோன்ற ஒரு திட்டத்தில் பணியாற்ற நான் விரும்புகிறேன்” என்றார்.