மணலி புதுநகரில் இன்று அய்யா வைகுண்டசாமி கோயிலில் கொடியேற்றம்

திருவொற்றியூர்: மணலி புதுநகரில் உள்ள அய்யா வைகுண்டசாமி கோயிலில் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் 10 நாள் புரட்டாசி மாத திருவிழா துவங்கியது. சென்னை மணலி புதுநகரில் அய்யா வைகுண்ட தர்மபதி கோயிலில் புரட்டாசி மாத 10 நாள் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். இதேபோல், இந்த ஆண்டு இக்கோயிலில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் புரட்டாசி மாத 10 நாள் விழா திருநாம கொடியேற்றத்துடன் துவங்கியது. இதைத் தொடர்ந்து, இன்று மதியம் பணிவிடை உச்சிப்படிப்பு நிகழ்ச்சி, மாலையில் திருஏடு வாசிப்பு, இரவு அய்யா காளை வாகனத்தில் பதிவலம் வருகிறார்.

இதைத் தொடர்ந்து விழா நடக்கும் நாட்களில் அய்யா வைகுண்ட தர்மபதி அன்னம், கருடன், மயில், ஆஞ்சநேயர், சர்ப்பம், மலர்முக சிம்மாசனம், காமதேனு உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பதிவலம் வருகிறார். இவ்விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண ஏடு வாசிப்பு, சரவிளக்கு பூஜை வரும் 14ம் தேதியும், அய்யா வைகுண்ட தர்மபதி திருத்தேர் உற்சவம் 16ம் தேதியும் நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு அய்யா வைகுண்ட தர்மபதி பூப்பல்லக்கில் பதிவலம் வருதல், பின் திருநாம கொடி அமர்தல் நிகழ்வுடன் 10 நாள் புரட்டாசி மாத திருவிழா நிறைவு பெறுகிறது என கோயில் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.