மதுரை: “மதவாத சக்திகளுக்கு எதிராக பிற மாநிலங்களிலும் ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்” என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
சென்னையில் இருந்து விமானம் மூலம் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ”தெலங்கானா ராஷ்ரிய சமிதியின் தேசிய கட்சி தொடக்க விழாவில் பங்கேற்றேன். குமாரசாமி மற்றும் தேசிய அளவில் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். இதன்மூலம் மதவாத சக்திகளுக்கு எதிராக ஓர் அணியில் ஜனநாயக சக்திகள் திரளும் கூட்டமாக பார்க்கிறேன். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அனைத்து ஜனநாயக சக்திகளும் வாக்குகளை சிதறாமல் பெற விடுதலை சிறுத்தைகள் துணை நிற்கும்.
எனது தலைமையில் நாளை (அக்.8) பாஞ்சான்குளம் பகுதியில் சாதியக் கொடுமையைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடக்கிறது. பாஞ்சான்குளம், குறிஞ்சான்குளம் பகுதிகளில் ஊர் கட்டுபாடு, சாதிப் பெயரால் சமுக புறக்கணிப்பை நடத்தியவர்களை கைது செய்யவேண்டும். காவல் துறை ஒரு தலைபட்சமாக செயல்படக் கூடாது.
கோவையில் நடக்கும் மணிவிழா பொதுக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, முத்துச்சாமி பங்கேற்கின்றனர். தமிழகத்தில் திமுக தலைமையில் மதசார்பற்ற ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து செயல்படுவது போன்று, பிற மாநிலங்களிலும் செயல்படவேண்டும்.
தமிழ் சமூகத்தில் சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது என இயக்குநர் வெற்றிமாறன் கூறினார். திருவள்ளுவர் சிலைக்கு காவி, மாமன்னன் ராஜ ராஜன் இந்து என கூறுவது ஆபத்தானது. ஒட்டுமொத்த இந்துக்களை சங்பரிவார் அமைப்புகள் இழிவுபடுத்துகிறது.
சிவகாசி பசுமை பட்டாசுகள் தொழில் முடக்கப்படுவதாக புகார் எழுகிறது. தமிழக அரசு தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எந்த ஆன்லைன் விளையாட்டாக இருந்தாலும், இளைஞர்கள் பாதிக்கின்றனர். இவற்றை தமிழக அரசு தடுக்கவேண்டும்.
சென்னையில் நடக்கும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி பேரணி அண்ணா சதுக்கத்தில் இருந்து அம்பேத்கர் சிலை வரை நடக்கும்” என்று அவர் கூறினார்.