புதுடெல்லி: வட மாநிலங்களில் ராவணன் உருவ பொம்மை தயாரிப்பில் முஸ்லிம் குடும்பங்களும் ஈடுபட்டுவருகின்றன. தசரா கொண்டாட்டத்தில் இது மதநல்லிணக்கத்துக்கு சான்றாக திகழ்கிறது.
வட இந்திய மாநிலங்களில் தசரா பண்டிகை விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இதில் முக்கிய நிகழ்வான ராவணன் உருவ பொம்மை எரிப்பு நேற்று நடைபெற்றது.
ராமாயணத்தில் அரக்கர் குலத்தைச் சேர்ந்த ராவணனை ராமர் போரில் வென்று, கொன்ற தினத்தை வட மாநிலங்களில் தீபாவளியாக கொண்டாடுகிறார்கள். தசரா பண்டிகையின் இறுதியிலும் ராவணன் மற்றும் அவனது தம்பி கும்பகர்ணனின் உருவ பொம்மைகளை வட இந்தியர்கள் எரித்து மகிழ்கின்றனர். தசராவில் இந்த உருவ பொம்மை எரிப்பு ஒவ்வொரு ஊரிலும் நடை பெறுகிறது. டெல்லியில் மட்டும் சுமார் 60 இடங்களில் ராவணன் உருவ பொம்மை எரிக்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த உருவ பொம்மைகளை தயாரிக்கும் கலைஞர்களில் முஸ்லிம்களும் இடம் பெற்றிருப்பதால் மத நல்லிணக்கம் பேணப்படுகிறது.
உத்தர பிரதேசம் ஆக்ராவின் முக்கியப் பகுதியில் 110 அடி உயரமுள்ள ராவணன் உருவ பொம்மை நேற்று எரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மாநில செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் பிரகாஷ் சந்திர அகர்வால் தலைமை ஏற்றார்.
இந்த உருவ பொம்மையை அருகிலுள்ள குவாலியரின் அஸ்லம் என்பவரின் குடும்பத்தினர் தயாரித்து கொடுத்துள்ளனர். பல வருடங்களாக இக்குடும்பத்தினரே உருவ பொம்மையை செய்து கொடுக்கின்றனர்.
உ.பி.யின் மற்றொரு நகரமான ஜோன்பூரில் சுபான் மியான் என்பவரின் குடும்பத்தார், தசரா வுக்காக சுமார் 80 அடி உயரமுள்ள ராவணன் உருவ பொம்மையை தயாரிக்கின்றனர்.
இப்பணியில் முஸ்லிம்களாக சுபான் மியான் குடும்பத்தினர் மூன்று தலைமுறைகளாக இப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை தவிர வேறு எவரிடமும் உருவ பொம்மை செய்யும் பணியை ஜோன்பூர் இந்துக்கள் அளிப்பதில்லை.
மதக்கலவரங்கள் அதிகம் நடைபெறும் உ.பி. நகரங்களில் முக்கியமானது கான்பூர். இங்குள்ள ரயில் பஜாரில் முகம்மது இக்பால் என்பவரின் குடும்பம் மூன்று தலைமுறைகளாக ராவணன் உருவ பொம்மை தயாரிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளது.
கான்பூர் மற்றும் அதை சுற்றியுள்ள பதேபூர், உன்னாவ், ஹமீர்பூர், சிக்கந்தரா, ஜலோன் உள்ளிட்ட பல ஊர்களுக்கு இவர்கள் உருவ பொம்மைகளை செய்து தருகின்றனர். இந்த உருவ பொம்மைகளை ரூ.9,000 முதல் ரூ.1 லட்சம் வரை விற்பனை செய்கின்றனர். ஆண்டுதோறும் இதன் மூலம் கிடைக்கும் வருமானமே இக்பால் குடும்பத்துக்கு வாழ்வாதாரமாக உள்ளது.
கான்பூர் அருகிலுள்ள உன்னா வின் ராம்நகர் கிராமத்தில் ஒரு வித்தியாசமான வழக்கம் உள்ளது. இதில் நீலநிறமான பனங்காடை எனும் பறவையை பறக்க விடுகின்றனர். பனங் காடையை அக்கிராமத்தினர் ஹனுமன் கோயில் முன் கூடி நின்று பார்வையிட்ட பின் உருவ பொம்மையை எரிக்கின்ற னர். இப்பறவையை ராம்நகர் கிராமத்தின் ஒரு முஸ்லிம் குடும்பத் தினர்தான் பறக்க விடுகின்றனர். தசராவுக்கு சில நாட்கள் முன்பாக இப்பறவையை அந்த முஸ்லிம் குடும்பத்தினர் தேடிப் பிடித்து வைக்கின்றனர். இந்த வழக்கம் அங்கு 200 வருடங்களாக நிலவுவதாகக் கூறப்படுகிறது.