சென்னை: வரும் 17ந்தேதி அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், தற்போதைய இடைக்காலப் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, வரும் திங்களன்று அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் தனது தலைமையில் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
அதிமுகவின் 51-வது ஆண்டுவிழா வருகிற 17-ம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதையொட்டி, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்ட முடிவு செய்துள்ளார்.
வருகிற திங்கட்கிழமை (10-ம்தேதி) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறவுள்ள இந்த கூட்டத்தில், கட்சியின் ஆண்டுவிழாவை சிறப்பாக கொண்டாடுவது மற்றும் கட்சியின் நிலைபாடுகள், திமுக அரசின் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதேநேரத்தில், ஓ.பன்னீர்செல்வம் கருத்து மற்றும் கட்சியில் டிடிவி தினகரன், வி.கே.சசிகலா ஆகியோரை சேர்ப்பது குறித்தும் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.