புதுடெல்லி: தேர்தல் நேரத்தில் பல்வேறு வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகள், தாங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற நிதி திரட்டுவது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு, அரசியல் கட்சிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.
தேர்தல் நேரத்தில், இலவச மின்சாரம், விவசாயக் கடன் தள்ளுபடி, நகைக் கடன் தள்ளுபடி, இலவசப் பேருந்து பயணம் உள்ளிட்ட அறிவிப்புகளை, அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளாக அறிவிக்கின்றன.
எனினும், இதனால் ஏற்படும் பின்விளைவுகளை அரசியல் கட்சிகள் யோசிப்பதில்லை. கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளிக்கும் அரசியல் கட்சிகள் தேர்ந்தெடுக்கப்பட்டால், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் கட்டாயத்துக்கு உள்ளாகின்றன.
இந்த இலவசத் திட்டங்கள், மாநில அரசுக்கு கடும் நிதிச் சுமையை ஏற்படுத்துகின்றன. இதனால், தேர்தல் நேர இலவச அறிவிப்புகள் தொடர்பாக பல விவாதங்களும் நடைபெறுகின்றன.
இந்த இலவச அறிவிப்புக் கலாச்சாரம் தொடர்பாக அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்திருந்தார். இந்நிலையில், அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் நேற்று முன்தினம் ஒரு கடிதம் அனுப்பியது.
அதில், “தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு இலவசத் திட்டங்கள் குறித்த வாக்குறுதிகளை வெளியிட்டால், ஆட்சிக்கு வந்ததும் அவற்றை நிறைவேற்ற நிதி திரட்டுவது எப்படி? வரியை உயர்த்த திட்டமா அல்லது வரி அல்லாத வருவாயை உயர்த்ததிட்டமா? அரசு செலவினங்களை விவேகமான முறையில் மாற்றியமைக்கும் திட்டம் உள்ளதா? அந்த திட்டங்களை நிறைவேற்ற கூடுதலாக கடன் வாங்கப்படுமா? அல்லது வேறு ஏதாவது திட்டம் உள்ளதா? இலவசத் திட்டங்கள் யாருக்கு? எவ்வளவு? போன்ற விவரங்களை அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்துக்குத் தெரிவிக்க வேண்டும்.
இது தொடர்பாக தங்கள் கருத்துகளையும் கட்சிகள் வரும் 19-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் இந்தக் கடிதம், இலவசத் திட்டங்களை அறிவிக்கும் எதிர்க்கட்சிகளுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.