வாபஸ் பெறுவாரா சசிதரூர்.. காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெறுமா?

காங்கிரஸ் கட்சிக்கு புதிய தலைவரை தேர்ந்தெடுக்க வாக்கெடுப்பு நடைபெறுமா என காங்கிரஸ் வட்டாரங்களில் பரபரப்பாக கேள்வி எழுப்பப்படுகிறது. மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் ஆகிய இருவரும் களத்தில் உள்ள நிலையில், சசி தரூர் வெற்றி பெற வாய்ப்பு இல்லை என்பதால், போட்டியிலிருந்து அவர் விலக வாய்ப்பு உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். 
மல்லிகார்ஜுன் கார்கே காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் “பாரத் ஜோடோ” யாத்திரைக்கு தலைமை தாங்கும் ராகுல் காந்தி ஆகியோரின் ஆதரவை பெற்றவர் என காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆகவே அவருக்கு கட்சியின் பெரும்பாலான மூத்தத் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், சசி தரூருக்கு ஒரு சில ஆதரவாளர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். G23 அதிருப்தி தலைவர்கள் கூட சசி தரூருக்கு ஆதரவாக களம் இறங்கவில்லை.
ஆதரவு திரட்ட மல்லிகார்ஜுன் கார்கே மற்றும் சசி தரூர் பல்வேறு மாநிலங்களுக்கு சென்றபோது, மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு வலுவான ஆதரவு கிட்டியது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் ஒரு சிலர் மட்டுமே சசி தரூரை சந்தித்தனர். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தி முதலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டை களமிறக்க திட்டமிட்டார். அந்தத் திட்டத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டதால், கட்சித் தலைமையின் ஆதரவு பெற்ற வேட்பாளராக மல்லிகார்ஜுன் கர்கே திகழ்கிறார். வெளிப்படையாக சோனியா காந்தியோ அல்லது ராகுல் காந்தியோ யாருக்கும் ஆதரவு தெரிவிக்கவில்லை. ஜனநாயக முறைப்படி யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி வருகிறது.
image
இருந்தபோதிலும் மல்லிகார்ஜுன் கார்கேயின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது அவர் கட்சித் தலைமையின் நம்பிக்கையை பெற்ற வேட்பாளர் என்பதால்தான் எனவும், சசி தரூருக்கு எந்த வாய்ப்பும் இல்லை எனவும் காங்கிரஸ் தலைமையக வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஒருவேளை சசி தரூர் தனது வேட்பு மனுவை வாபஸ் வாங்கினால், மல்லிகார்ஜுன் கார்கே போட்டியின்றி வெற்றி பெறுவார். சசி தரூர் உறுதியாக களத்தில் நின்றால், அக்டோபர் 17-ம் தேதி புதிய காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க வாக்குப்பதிவு நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு அக்டோபர் 19-ம் தேதி அன்று முடிவு அறிவிக்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படி வாக்குப்பதிவு நடைபெற்றாலும், வெற்றி பெறபோவது மல்லிகார்ஜுன் கார்கேதான் எனவும், வாக்கு வித்தியாசம் எத்தனை என்பதே ஒரே சுவாரசியமாக இருக்கும் எனவும் காங்கிரஸ் தலைவர்கள் கருதுகின்றனர்.
– கணபதி சுப்ரமணியம்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.