விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படம் அவமதிப்பு – விசிகவினர் எதிர்ப்பு!

ஓசூர் அருகே விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படம் அவமதிக்கப்பட்டதால் கிராம மக்கள் மற்றும் விசிக கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தட்டிகானப்பள்ளி கிராமத்தில் விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படத்தை மர்ம நபர்கள் சாணி பூசி அவமதித்துள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
image
ஓசூர் அருகே உள்ள தட்டிகானப்பள்ளி கிராமத்தில் பல தரப்பட்ட சமூக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இங்கு பட்டியல் இன மக்கள் வாழும் பகுதியில் விசிக சார்பில் கட்சியின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் உருவப்படம் மற்றும் அம்பேத்கர் உருவப்படம் ஆகியவை இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு நேரத்தில் அப்பகுதிக்கு சென்ற மர்ம நபர்கள் விசிக பெயர் பலகையில் இருந்த அம்பேத்கர் உருவப்படத்தை சாணியை கொண்டு அவமதித்து சென்றுள்ளனர். இன்று காலை பொதுமக்கள் அதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
image
இதுகுறித்து தகவல் அறிந்த பாகலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். அம்பேத்கர் உருவப்படத்தை அவமதித்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே இந்த சம்பவத்திற்கு கிராம மக்கள் மற்றும் விசிக கட்சியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
image
உடனடியாக காவல்துறையினர் அம்பேத்கர் படத்திற்கு அவமதிப்பு செய்த மர்ம நபர்களை கைது செய்ய வேண்டும் என விசிக கட்சியினரும் அப்பகுதி மக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.