பெங்களூரு,
ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள புரோ கபடி லீக் 2014-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் காரணமாக 2020-ம் ஆண்டு மட்டும் கைவிடப்பட்ட இந்த போட்டி, கடந்த ஆண்டு பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டல் வளாகத்தில் ரசிகர்கள் இல்லாமல் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கபடி ரசிகர்களால் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் 9-வது புரோ கபடி லீக் தொடர் பெங்களூருவில் உள்ள கண்டீவாரா உள்விளையாட்டு அரங்கில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. வருகிற 26-ந் தேதி வரை இங்கு முதல் சுற்று ஆட்டங்கள் நடைபெறுகிறது. அடுத்த இரண்டு சுற்று லீக் ஆட்டங்கள் புனே, ஐதராபாத்தில் நடக்கிறது. நவம்பர் 8-ந் தேதி வரை நடைபெறும் லீக் போட்டி அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டது. எஞ்சிய லீக் மற்றும் பிளே-ஆப் சுற்று, இறுதிப்போட்டி அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கபடி திருவிழாவில் நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி, 3 முறை சாம்பியனான பாட்னா பைரட்ஸ், முன்னாள் சாம்பியன்களான பெங்களூரு புல்ஸ், பெங்கால் வாரியர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், யு மும்பா மற்றும் தமிழ் தலைவாஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் உள்பட 12 அணிகள் கலந்து கொள்கின்றன. கடந்த ஆகஸ்டு மாதம் நடந்த வீரர்கள் ஏலத்தில் ஒவ்வொரு அணியும் தங்களுக்கு தேவையில்லாத வீரர்களை கழற்றி விட்டு விட்டு, தேவையான வீரர்களை விலைக்கு வாங்கியதுடன் அணியை வலுவாக தயார்படுத்தி கோதாவில் குதிக்கின்றன.
இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் ‘பிளே-ஆப்’ சுற்றை எட்டும். லீக்கில் முதல் 2 இடங்களை பெறும் அணிகள் நேரடியாக அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைக்கும். 3 முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி, அதில் வெற்றி காணும் 2 அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும்.
3 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ரசிகர்கள் போட்டியை நேரில் காண அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து இருப்பதுடன் வீரர்களுக்கும் இது புதிய உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. தொடர்ந்து சறுக்கலை சந்தித்த தமிழ் தலைவாஸ் அணி இந்த முறை நட்சத்திர ரைடர் பவன்குமார் செராவத் தலைமையில் களம் இறங்குகிறது.
தொடக்க நாளான இன்று 3 லீக் ஆட்டங்கள் நடக்கிறது. முதலாவது ஆட்டத்தில் நவீன் குமார் தலைமையிலான நடப்பு சாம்பியன் தபாங் டெல்லி, சுரிந்தர் சிங் தலைமையிலான முன்னாள் சாம்பியன் யு மும்பாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. மற்ற ஆட்டங்களில் பெங்களூரு புல்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் (இரவு 8.30 மணி) ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-உ.பி.யோத்தா (இரவு 9.30 மணி) அணிகள் மோதுகின்றன.