புற்றுநோயை விட, அந்த நோய் குணமடைய எடுத்துக் கொள்ளும் சிகிச்சைகள் வலி நிறைந்தவை. புற்றுநோய் ஒருவருக்கு ஏற்படும் போது, அந்த நோயாளி மட்டுமல்ல, குடும்பமே அந்த நோயை எதிர்த்துப் போராடுகிறது. வலி நிறைந்த சிகிச்சையில் இருக்கும் போது, அவரை கவனித்துக் கொள்பவருக்கு இரும்பினால் செய்யப்பட்ட இதயம் இருக்க வேண்டும்.
அன்பானவர்களுக்காகத் தோள் கொடுக்க முடியும், ஆனால் அவர்களின் வலிகளை ஒருபோதும் தாங்கிக் கொள்ள முடியாது. மாறாக அவர்களின் துக்க நாள்களில் கரம் பிடித்து ஆறுதலாக இருக்க முடியும். அப்படி ஆறுதலாக நீட்டப்படும் கரங்களின் பந்தங்கள் மேலும் உறுதியாகின்றன. அப்படி உறுதியான ஒரு பந்தத்தின் கதை தான் இது.
தம்பதியாக வாழ்ந்து வந்த ஹன்னா மற்றும் சார்லியின் வாழ்வில், புற்றுநோய் ஒரு பிரச்னையாக வந்து ஹன்னாவை தாக்கியது. வலி மிகுந்த அந்தச் சிகிச்சையை மேற்கொள்ள யாருக்குத்தான் பயம் இருக்காது. அப்போதுதான், `கேன்சரை குணப்படுத்த மேற்கொள்ளப்படும் கீமோதெரபி சிகிச்சையை முழுவதுமாக நீ முடித்துவிட்டால் உன்னை நான் துருக்கி கேபடோஷியாவில் பறக்கும் ராட்சத பலூனில் அழைத்துச் செல்கிறேன்’ என வாக்குறுதி அளித்தார், சார்லி.
ஒவ்வொரு கீமோதெரபி சிகிச்சைகளையும் தன்னுடைய கனவின் ஒரு பகுதி நிறைவேறியதாக ஏற்றுக் கொண்டார் ஹன்னா. முழுவதுமாக சிகிச்சை முடிந்த பின்பு, ஏற்கெனவே கூறியபடி துருக்கிக்கு அழைத்துச் சென்று பலூனில் பறக்க வைத்துள்ளார்.
நான்கு முறை கோவிட் மற்றும் கேன்சரால் தடைப்பட்ட இவர்களின் பயணம், இறுதியாக நிறைவேறியது. இன்ஸ்டாவில் பகிரப்பட்ட இந்தப் பதிவு வைரலாகி, பார்ப்பவர்களின் மனதை நெகிழ வைக்கும் விதமாக உள்ளது. பலரும் இந்தத் தம்பதியினருக்குக் கூடுதல் பலமும், ஆரோக்கியமும் கிடைக்கப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்து வருகின்றனர்.