கீவ்: “எங்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது” என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிபிசி நேர்காணலில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கூறும்போது, “எங்கள் மீது அணு ஆயுதங்களை பயன்படுத்த ரஷ்யா தயாராகி வருகிறது. அவர்கள் இது தொடர்பாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் அணு ஆயுதங்களை பயன்படுத்துவார்களா என்றால், அது எனக்கு தெரியாது. எனினும், இது ஆபத்தானது. என்னை பொறுத்தவரை அணு ஆயுதங்களை பற்றி பேசுவதே ஆபத்தானது. ரஷ்யாவின் அணு ஆயுத அச்சுறுத்தலைத் தடுக்க உலகம் இப்போதே செயல்பட வேண்டும்” என்று பேசினார்.
முன்னதாக, மான்ஹாட்டன் நகரில் ஊடக உலகின் ஜாம்பவானான ரூபர்ட் மர்டாக் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது, “உக்ரைன் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்துவேன் என்று ரஷ்ய அதிபர் புதின் சொல்வதை வெறும் பகடியாகக் கடந்துவிட முடியாது” என்று கூறி இருந்தார். இந்த நிலையில் ஜெலன்ஸ்கி, இந்தக் கருத்தை தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய முடிவு செய்த உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி இறுதியில் போர் தொடுத்தது. உக்ரைனின் பல பகுதிகள் தற்போது ரஷ்ய ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஏராளமான நவீன ஆயுதங்களை வழங்கியுள்ளன. இவற்றை வைத்து, உக்ரைன் வீரர்கள், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக தாக்குதல்களை நடத்தி இழந்த பகுதிகளை மீட்டு வருகின்றனர். போர் காரணமாக உக்ரைனில் லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில், ரஷ்யா செய்த போர்க் குற்றங்களை உக்ரைன் அவ்வப்போது வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.