“அரசுப் பள்ளிகளை சி.பி.எஸ்.இ-க்கு மாற்றுவதற்குக் காரணம் இதுதான்!" – தமிழிசை கூறும் விளக்கமென்ன?

புதுச்சேரியில் அனைத்து அரசுப் பள்ளிகளும் விரைவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்படும் என்று, மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக, “சி.பி.எஸ்.இ கல்வித்திட்டம் மூலம் இந்தியையும், குலக்கல்வியையும் திணிக்க முயல்கிறார்கள்” என்று புதுச்சேரி தி.மு.க குற்றம்சுமத்தியிருக்கிறது. இந்த நிலையில், காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், ”புதிய கல்விக் கொள்கை நிச்சயமாக அமல்படுத்தப்படும். அரசுப் பள்ளிகளை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக்கு மாற்ற வேண்டும் என்று கூறியிருக்கிறோம். புதுச்சேரி, காரைக்கால் தமிழக பாடத் திட்டத்தையும், மாஹே கேரள பாடத் திட்டத்தையும், ஏனாம் ஆந்திர பாடத்திட்டத்தையும் பின்பற்றுகிறது. புதுச்சேரி மாநில அரசுப் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை கொண்டு வரும்போது அது மக்களுக்கு நல்ல பலனைக் கொடுக்கும்.

சி.பி.எஸ்.இ

மாணவர்களுக்கு பல சலுகைகள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குழந்தைகளின் கல்வி மேம்பட வாய்ப்பு இருக்கிறது. தங்கள் பிள்ளைகள் மட்டும் நல்ல தனியார் பள்ளியில் படிக்க வேண்டும். ஆனால், ஏழைக் குழந்தைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்தி விடக்கூடாது என்றும் சில அரசியல்வாதிகள் செயல்படுகிறார்கள். நிச்சயமாக புதுச்சேரியில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி வாய்ப்புகளை மேம்படுவதற்கான, நல்ல உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய பள்ளி அறைகள் கிடைக்க வாய்ப்பாக இருக்கும். அதனால் இது நல்லதொரு முயற்சிதான்.

தமிழிசை

புதிய கல்விக் கொள்கையில் பல நல்ல விஷயங்கள் இருக்கின்றன. ஆனால் இந்தி மொழியை திணிப்பது, குலக்கல்வி என்றெல்லாம சிலர் கூறுகிறார்கள். 30 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புதிய கல்விக் கொள்கையை அரசு கொண்டு வந்திருக்கிறது. பாரதப் பிரதமர் கூறியதைப் போல, வகுப்பறைகளிலிருந்து உலக அரங்குக்கு குழந்தைகள் அழைத்துச் செல்வதுதான் புதிய கல்விக் கொள்கை திட்டம். அதனால் அனைத்தையும் அரசியலாக்க வேண்டாம். புதுச்சேரிக்கென தனி கல்விக் கொள்கை வெளியிடுவதில் புவியியல்ரீதியான சிக்கல் இருக்கிறது. அதனால்தான் சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தைக் கொண்டு வருகிறோம்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.