திருமலை: ஆந்திராவில் காவல்நிலையத்தில் புதைத்து வைத்த வெடிப்பொருட்கள் வெடித்து கதவு, ஜன்னல்கள், பைக், கார்கள் சேதமானது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கங்காதரநெல்லூர் காவல்நிலையத்தில் வழக்கம்போல் நள்ளிரவு பணியில் சில காவலர்கள் ஈடுபட்டிருந்தனர். இன்று அதிகாலை 3 மணி அளவில் திடீரென காவல்நிலையத்தில் வெடிவிபத்து ஏற்பட்டது. சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், மர்ம ஆசாமிகள் யாரேனும் வெடிகுண்டு வீசினார்களா? என்ற சந்தேகத்தில் ஓடிவந்து பார்த்தனர்.
அப்போது காவல்நிலையத்தின் கதவுகள், ஜன்னல் கண்ணாடிகள், வழக்குகளில் பிடிபட்டு காவல்நிலைய வளாகத்தில் இருந்த பைக், கார் உள்ளிட்டவை சேதமாகியிருந்தது தெரியவந்தது. வெடி விபத்தில் அங்கிருந்த போலீசார் காயமின்றி தப்பினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்த சித்தூர் எஸ்.பி.ரிஷாந்த் ரெட்டி அங்கு வந்து விசாரணை நடத்தினார். பின்னர் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2018ம் ஆண்டு ஜூன் மாதம் ஒரு வழக்கு தொடர்பாக நாட்டு துப்பாக்கிக்கு பயன்படுத்தும் வெடித்துகள்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டது.
அப்போது தடயவியல் ஆய்வுக்காக நாட்டுத்துப்பாக்கியின் வெடித்துகள்கள் கங்காதர நெல்லூர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டது. ஆய்வுக்கு பின்னர் அந்த வெடித்துகள்கள், காவல்நிலையத்தின் பின்புறம் உள்ள ஒரு ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டது. ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடித்துகள்தான் வெடித்துள்ளது. இதனால் பொதுமக்களுக்கோ, காவல்துறையினருக்கோ எவ்வித காயமுமில்லை. அதிர்ஷ்டவசமாக அவர்கள் தப்பினர் என தெரிவித்துள்ளார்.