ஈரோடு அருகே, ஆன்லைன் சூதாட்டத்தில் 5 லட்சம் ரூபாய் இழந்ததால் விரக்தி அடைந்த தனியார் மில் அதிகாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
ஈரோடு மாவட்டம் சிங்காநல்லூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (34). இவருடைய மனைவி கீதா (34). காதலித்து திருமணம் செய்துகொண்ட இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கொளப்பலூரில் உள்ள ஒரு தனியார் மில்லில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார்.
கிருஷ்ணமூர்த்தி, செல்போனில் ஆன்லைன் ரம்மி விளையாடி வந்ததாக தெரிகிறது. அந்த வகையில், கடந்த 6 மாதத்தில் ஆன்லைனில் ரம்மி விளையாடி ரூ.5 லட்சத்தை இழந்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த அவர் அடிக்கடி மனைவியிடம் புலம்பி வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்த கிருஷ்ணமூர்த்தி, தோட்டத்துக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு சென்றார். அங்கு சென்றதும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து, அங்குள்ள ஒரு மரத்தில் நைலான் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் கிருஷ்ணமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.