பா.ம.க நிறுவனர் ராமதாஸ் கர்நாடகாவில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு அதிகரிக்கப்படவிருப்பது தொடர்பாக தனது ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார். அதில், “கர்நாடகாவில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இட ஒதுக்கீடு 15 சதவிகிதத்திலிருந்து 17 சதவிகிதமாகவும், பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு 3 சதவிகிதத்திலிருந்து 7 சதவிகிதமாகவும் உயர்த்த அந்த மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.
இது மிகச்சிறந்த சமூகநீதி காக்கும் நடவடிக்கையாகும். தமிழ்நாட்டில் பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22 சதவிகிதமாக உயர்த்த வேண்டும் என்று 1980-ம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளிலிருந்து வலியுறுத்தி வருகிறேன்.
இந்த கோரிக்கையையும் வலியுறுத்திதான் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இட ஒதுக்கீடு அதிகரிப்பதால், மொத்த இட ஒதுக்கீட்டையும் 56 சதவிகிதமாக உயர்த்த கர்நாடக அரசு தீர்மானித்திருப்பது துணிச்சலான நடவடிக்கை. தமிழ்நாட்டிலும் அத்தகைய துணிச்சலான நடவடிக்கையை எடுக்க அரசு முன்வர வேண்டும்” என குறிப்பிட்டிருக்கிறார்.