இந்தியாவில் மட்டுமே ‘பொன்னியின் செல்வன்’ படம், 8 நாட்களில் 200 கோடி ரூபாய் வசூலை ஈட்டி சாதனை செய்துள்ளது.
மணிரத்னத்தின் கனவுப் படமான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் கடந்த 30-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ராஜராஜசோழன் அரியணை ஏறும் சம்பவங்களை வைத்து புனையப்பட்ட ‘பொன்னியின் செல்வன்’ நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை என்பதால் திரையரங்குகளில் கூட்டம் நிறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த 8 நாட்களில் இந்தியாவில் மட்டும் 200 கோடி ரூபாய் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது.
தமிழகத்தில் மட்டும் 130 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளது. அமெரிக்காவில் இந்தப் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், உலக முழுவதும் சுமார் 8 நாட்களில் 345 கோடி ரூபாய் வருமானம் வந்துள்ளது. படம் வெளியாகி இரண்டாவது வாரத்தை தொட்ட நிலையிலும், வேறு படங்கள் பெரிதாக வெளியாகாததாலும் இந்தப் படத்திற்கான கூட்டம் குறையவில்லை. விரைவில் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தின் வசூலை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.