இந்தியா விரும்பும் நாட்டில் இருந்து எண்ணெய்யை வாங்கும்: அமெரிக்காவில் மத்திய மந்திரி பேச்சு

வாஷிங்டன்,

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மந்திரி ஹர்தீப் சிங் புரி அந்நாட்டின் பெட்ரோலிய துறை மந்திரி ஜென்னிபர் கிரான்ஹோம் மற்றும் பைடன் நிர்வாகத்தில் உள்ள பிற உயர்மட்ட அதிகாரிகளையும் சந்தித்து பேசினார்.

இதனை தொடர்ந்து, வாஷிங்டன் நகரில் செய்தியாளர்கள் சந்திப்பில் அவரிடம், எரிபொருள் வாங்குவதில் ரஷியாவை சார்ந்து இருப்பதற்கு எதிராக இந்தியாவுக்கு அழுத்தம் அளிக்கப்பட்டதா? என கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு புரி நேரடியான முறையில் அளித்த பதிலில், ரஷியாவிடம் இருந்து எண்ணெய்யை வாங்குவது நிறுத்தப்பட வேண்டும் என யாரேனும் என்னிடம் கூறினார்களா? என்று கேள்வி எழுப்பப்படுகிறது. அதற்கான பதில் இல்லை என்பதே.

அதிகளவு நுகர்வோர்களை கொண்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. தனக்கு தேவையான எண்ணெய்யை எந்தவொரு நாட்டிடம் இருந்தும் இந்தியா வாங்கும். அதனால், இதுபற்றி விவாதம் நடத்த முடியாது என கூறியுள்ளார்.

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து, ரஷியாவுக்கு எதிராக மேற்கத்திய நாடுகள் பொருளாதார தடை உள்ளிட்டவற்றை பிறப்பித்து ரஷியாவுக்கு நெருக்கடி அளித்தது. இதன் ஒரு பகுதியாக அந்நாட்டுடனான இந்தியாவின் பொருளாதார உறவுக்கும் நெருக்கடி அளிக்கப்பட்டது.

இதுபற்றி இந்தியாவுடனான பேச்சுவார்த்தையின்போது, எண்ணெய் கொள்முதலில் ரஷியாவுடனான பொருளாதார தொடர்பை நிறுத்தி கொள்ளும்படி அமெரிக்கா பெருமளவில் வலியுறுத்தியது என சில ஊடகங்களில் தகவல்கள் வெளிவந்தன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.