இந்திய வல்லமையை பறைசாற்றும் 4 வகை போர் விமானங்கள் | இந்திய விமானப்படை தினம் பகிர்வு

இந்தியாவின் வான் வெளியை பாதுகாக்கும் இந்திய விமானப்படை 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர் ஆட்சியில் பிரிட்டிஷ் ராயல் விமானப்படையின் ஒரு பகுதியாக இந்திய விமானப்படை இருந்தது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு இந்திய விமானப்படை என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. உலகிலேயே மிகப்பெரிய விமானப்படைகளில் இந்திய விமானப்படை 4-வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய விமானப்படையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் வீரர்கள் பணிபுரிகின்றனர்.

ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய விமானப்படையில் போர் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் அதிக அளவில் சேர்க்கப்பட்டு வருகின்றன. இவற்றில் 4 போர் விமானங்கள் இந்திய விமானப்படையின் முக்கிய அரணாகப் பார்க்கப்படுகிறது. அவை:

ரஃபேல்: ரஃபேல் ரக போர் விமானங்கள் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது. இதன் நீளம் 15.3 மீ. உயரம் 10.8 மீட்டர். ஒரு முறை எரிபொருள் நிரப்பினால் 3700 கி.மீ தூரம் தொடர்ந்து பறக்க முடியும். அதிகபட்சமாக மணிக்கு 2200 கி.மீ வேகத்தில் செல்லும் இந்த விமானத்தின் எடை 10 ஆயிரம் கிலோ. எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பினால் இதன் எடை 24 ஆயிரம் கிலோவாக அதிகரிக்கும்.

இந்த ரஃபேல் வகையில் மொத்தம் 10 விமானங்கள் உள்ளன. இவற்றில் டிஎச் மற்றும் இஎச் வகை விமானங்கள் இந்திய விமானப்படையில் உள்ளன. இந்த வகை விமானங்களில் வானத்தில் இருந்து வானத்தில் உள்ள இலக்குகளை தாக்கும் 4 ஏவுகணைகள், வானத்தில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் 6 ஏவுகணைகள், அணு ஆயுதங்கள் ஆகியவை இருக்கும்.

மிக் 29: மிக் 29 ரக போர் விமானங்கள் ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்டது. தற்போது இந்திய விமானப்படையில் 60, கடற்படையில் 40 விமானங்கள் உள்ளன. இந்த வகை விமானங்களில் ரஷ்ய தயாரிப்பு ஆயுதங்களை மட்டுமே பொருத்த முடியும்.

இதனை மாற்றி இந்த விமானங்களை நவீனமயம் ஆக்கும் பணியை எச்ஏஎல் செய்து வருகிறது. இதில் பிரத்யேகமாக இலக்குகளை குறி வைக்கும் கம்ப்யூட்டர்கள் மற்றும் ஆஸ்ட்ரா ஆயுதங்களையும் இணைக்கும் பணி சோதனை முறையில் நடைபெற்று வருகிறது.

தேஜஸ்: தேஜஸ் ரக போர் விமானங்கள் இந்தியாவில் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. இதன் நீளம் 13.20 மீ, உயரம் 4.40 மீட்டர். அதிகபட்சமாக மணிக்கு 2,300 கி.மீ வேகத்தில் பறக்க முடியும். காலியாக உள்ள விமானத்தில் எடை 5680 கிலோ. எரிபொருள் மற்றும் ஆயுதங்கள் நிரப்பினால் இதன் எடை 9,500 கிலோவாக அதிகரிக்கும்.

தற்போது இந்திய விமான் படையில் தேஜஸ் மார்க் 1 ரக விமானங்கள் உள்ளது. இதனைத் தொடர்ந்து தேஜஸ் 2.0 திட்டத்தில் தேஜஸ் மார்க் 2 ரக விமானங்கள் தயார் செய்யப்படவுள்ளது. மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டிஆர்டிஓ) மற்றும் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் இணைந்து 2030-ம் ஆண்டு இதன் உற்பத்தி தொடங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

சுகோய் 30: சுகோய் 30 ரக விமானங்களை இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இணைத்து தயாரித்த விமானங்கள் ஆகும். இதன் நீளம் 21 மீட்டர். உயரம் 6.36 மீட்டர். இந்த வகை விமானங்களால் மணிக்கு 2120 கி.மீ வேகத்தில் பறக்க முடியும். காலியாக உள்ளபோது விமானத்தின் எடை 18,400 கிலோ. எரிபொருள் நிரப்பிய பிறகு விமானத்தின் எடை 26,090 கிலோ ஆகும். இந்திய விமானப்படையில் உள்ள போர் விமானங்களில் அதிக எடை உள்ள போர் விமானங்கள் இந்த வகை விமானங்கள்தான்.

இந்திய விமானப்படையில் பல்வேறு விமானப்படை நிலையங்களில் மொத்தம் 10-க்கு மேற்பட்ட சுகோய் விமானங்களின் படைப் பரிவுகள் உள்ளன. தமிழகத்தில் தஞ்சாவூரில் உள்ள விமானப்படை தளத்தில் இந்தப் படைப் பிரிவு உள்ளது. தென் இந்தியாவில் சுகோய் விமானப்படைப் பிரிவு உள்ள ஒரே விமானப்படைத் தளம் தஞ்சாவூர்தான். இந்த வகை விமானங்கள் இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணையை தாங்கிச் செல்லும் திறன் படைத்தவை ஆகும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.