புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்கலாம் என்பது குறித்து பரிந்துரை செய்யும்படி தலைமை நீதிபதி யுயு.லலித்துக்கு ஒன்றிய அரசு கடிதம் எழுதியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தற்போது தலைமை நீதிபதியாக இருப்பவர், தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக அடுத்த தலைமை நீதிபதியாக யாரை நியமிக்க வேண்டும் என்பதை ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும். இது, வழக்கமான நடைமுறை. கடந்த முறை தலைமை நீதபதியாக இருந்த என்.வி.ரமணா, தான் ஓய்வு பெறும் முன்பாக தற்போதுள்ள தலைமை நீதிபதி யு.யு.லலித்தின் பெயரை பரிந்துரை செய்தார். இந்நிலையில், யு.யு.லலித்தும் அடுத்த மாதம் 8ம் தேதி ஓய்வு பெறுகிறார்.
இதனால், தனக்கு பிறகு புதிய தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட வேண்டியவரின் பெயரை பரிந்துரை செய்யும்படி, லலித்துக்கு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. தற்போது, தலைமை நீதிபதிக்கு அடுத்தப்படியாக மூத்த நீதிபதியாக உள்ளவரே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது மூத்த நீதிபதியாக இருக்கும் டி.ஒய்.சந்திராசூட் அடுத்த தலைமை நீதிபதியாக நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இப்பதவிக்கு நியமிக்கப்பட்டால், 2024ம் ஆண்டு நவம்பர் 10ம் தேதி வரையில் தலைமை நீதிபதியாக நீடிப்பார்.