கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தை, ‘கார்பன் டேட்டிங்’ செய்வது குறித்த விசாரணையை வரும் 11-ம் தேதிக்கு வாரணாசி நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.
உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயிலின் பக்கத்தில் கியான்வாபி மசூதி உள்ளது. இந்நிலையில் முகலாய மன்னர்கள் காலத்தில் காசி விஸ்வநாதர் கோயிலின் ஒரு பகுதியை இடித்துவிட்டு தான் கியான்வாபி மசூதி கட்டப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதனை தொடர்ந்து கியான்வாபி மசூதியின் சுவர் இருக்கும் பக்கத்தில் அமைந்துள்ள சிங்கார கவுரி அம்மனை வழிபட அனுமதிக்க வேண்டும் என கடந்த வருடம் ஆகஸ்ட் 18ம் தேதி வாரணாசி நீதிமன்றத்தில் 5 இந்து பெண்கள் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த பின்னார் கியான்வாபி மசூதியில் கள ஆய்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு அறிக்கையில், மசூதியின் ஒசுகானாவின் நடுவே சிவலிங்கம் போன்ற அமைப்பு இருப்பது குறிப்பிடப்பட்டிருந்தை தொடர்ந்து கியான்வாபி மசூதியில் சிவலிங்கம் அமைந்துள்ள இடத்தை சீல் வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 12-ம் தேதி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தப் போது, ‘ கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கத்தின் உண்மையான வயதை கண்டறிய ‘கார்பன் டேட்டிங்’ ஆய்வு நடத்த வேண்டும் என்று இந்து பெண்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இருப்பினும் அந்த 5 பெண்களில் ஒருவர் மட்டும் ’ கார்பன் டேட்டிங்’ ஆய்வு நடத்தினால் சிவலிங்கம் உடைக்கப்படும் அதனால் ‘கார்பன் டேட்டிங்’ செய்ய வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் கியான்வாபி மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டியும் ‘கார்பன் டேட்டிங்’ ஆய்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
இந்த சூழலில் வாரணாசி மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஷ்வாஸ், ‘கார்பன் டேட்டிங்’ ஆய்வு குறித்து வரும் 11-ம் தேதிக்குள் அஞ்சுமன் இன்தஜாமியா கமிட்டி எழுத்துபூர்வமாக பதில் அளிக்க வேண்டும் மற்றும் கியான்வாபி மசூதியில் கண்டுபிடிக்கப்பட்ட சிவலிங்கம் வழக்கோடு தொடர்புடையதா, இல்லையா என்பது குறித்தும், அறிவியல்பூர்வ ஆய்வுக்கு ஆணையம் அமைக்கலாமா என்பது குறித்தும் இந்து தரப்பு விளக்கம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கு வரும் 11ம் தேதிக்கு விசாரணைக்கு வரும் போது இந்த வழக்கில் ஒரு முடிவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM