சென்னை: குஜராத்தில் நடைபெறும் 36-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழ்நாடு வாலிபால் சங்கம் சார்பில் கலந்து கொள்ளத் தகுதியான வீரர்களைத் தேர்வு செய குழு ஒன்றை இந்திய வாலிபால் கூட்டமைப்பு அமைத்தது. இதை எதிர்த்து தமிழ்நாடு வாலிபால் சங்கம் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, வாலிபால் சங்கம் தேர்வு செய்த வீரர்களை குஜராத் போட்டிகளில் அனுமதிக்கும்படி, மத்திய அரசுக்கும் குஜராத் மாநில அரசுக்கும் உத்தரவிட்டிருந்தார். இதை ரத்து செய்யக்கோரி வாலிபால் கூட்டமைப்பு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், ஆர்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவால் குஜராத் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தமிழகம் சார்பில் யாரும் பங்கேற்க இயலாது என விளையாட்டு தொழில்நுட்ப நடத்தைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கெனவே பீச் வாலிபால் போட்டியில் பங்கேற்க இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது. அந்த நிலைமை வாலிபால் வீரர்களுக்கும் வரக்கூடாது எனக்கூறி தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர்.