கட்ச் (குஜராத்): இந்திய கடலோர காவல்படை (ICG ) மற்றும் குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு (ஏடிஎஸ்) இணைந்து நடத்திய அதிரடி நடவடிக்கையில், குஜராத் கடற்கரையில் பாகிஸ்தான் படகில் கொண்டு வரப்பட்ட ரூ.350 கோடி மதிப்புள்ள 50 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. அரேபிய கடலில் சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்கு (IMBL) அருகில் உள்ள இந்திய கடல் பகுதியில் அல் சகர் என்ற படகில் இருந்து ஆறு பாகிஸ்தானியர்களை ICG மற்றும் குஜராத் ATS கைது செய்தது. குஜராத்தில் உள்ள ஜக்காவ் துறைமுகத்தில் படகு மேலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இந்திய கடலோர காவல்படை தனது ட்விட்டர் பக்கத்தில், “ஏடிஎஸ் குஜராத்வுடன் இணைந்து நடத்திய சோதனையில், சுமார் 350 கோடி மதிப்புள்ள சுமார் 50 கிலோ ஹெராயின் கொண்டு சென்ற பாகிஸ்தான் படகு அல் சாகரை, 6 பேர்களுடன் அரபிக்கடலில் இந்திய கடலோர காவல்படையினர் கைது செய்தனர். மேலதிக விசாரணைக்காக ஜகாவுக்கு கொண்டு வரப்பட்டது” என பதிவிடப்பட்டது.
“நள்ளிரவில், ஒரு பாகிஸ்தானிய படகு இந்திய கடற்பரப்பில், IMBL-ல் 5 நாட்டிகல் மைல்கள் மற்றும் ஜக்காவ்விலிருந்து 40 நாடிகல் மைல்கள் தொலைவில், சந்தேகத்திற்கிடமான வகையில் வருவதை கண்ட நிலையில், இந்திய கடலோர படை கண்காணிக்க தொடங்கியது. இதில், பாகிஸ்தான் படகு தப்பிக்க முயன்றது. இருப்பினும், இரு கப்பல்களும் பாகிஸ்தான் படகை இடைமறித்து கைப்பற்றின. படகில் ஏறும் போது, 50 கிலோ எடையுள்ள ஹெராயின் என நம்பப்படும் போதைப்பொருள், 5 சாக்கு பைகளில் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை முழுமையாக அலசி ஆராய்ந்தனர்” என கடலோர காவல் படை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த ஆண்டில் குஜராத்தின் ஐசிஜி மற்றும் ஏடிஎஸ் இணைந்து நடத்திய ஆறாவது நடவடிக்கை இதுவாகும். செப்டம்பர் 14 அன்று பாகிஸ்தான் படகில் இருந்து 40 கிலோ போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.