இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக கைக்குழந்தையுடன் அகதிகளாகத்
தமிழகத்துக்குச் சென்ற 5 பேர் கொண்ட குடும்பம் ஒன்று முப்பது மணிநேரத்தின்
பின்பு இந்தியக் கரையோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
மன்னாரில் இருந்து படகு வழியாகச் சென்ற 5 பேரும் இந்தியாவின் ஆளுகையில் உள்ள
5ஆம் திட்டில் தரை இறக்கி விடப்பட்டுள்ளனர்.
இவர்களை அவதானித்த தமிழக மீனவர்கள் நேற்று காலை மறாயன் பொலிஸாருக்குத் தகவல்
வழங்கியுள்ளனர்.
மீனவர்கள் வழங்கிய தகவல்
இதையடுத்து அகதிகள் நின்ற இடத்துக்குச் சென்ற இந்தியக் கரையோரக்
காவல்படைக்குச் சொந்தமான படகு, அகதிகள் எவரும் தீவில் இல்லை எனத்
திரும்பியுள்ளனர்.
இருந்தபோதும் இன்று காலை மீண்டும் மீனவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில்
ஐவரும் மீட்கப்பட்டு இராமேஸ்வரத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
3 பிள்ளைகளுடன் தந்தையும், தாயும் தற்போது பொலிஸாரின் விசாரணையில் உள்ளனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் இறக்கிவிடப்பட்டதில் இருந்து இன்று 10 மணிவரை
உணவு, தண்ணீர் இன்றித் தவித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.