சிறந்த முன்னணி நடிகருக்கான ஆசியக் கண்டத்தின் ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட்’ விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய திரைப்படங்களுக்கான ‘ஏசியன் அகாடமிக் கிரியேட்டிவ் அவார்ட் 2022’ விருதுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பதினாறு நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மொழிப்படங்கள் கலந்துகொண்டன. சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த தொழில் நுட்ப கலைஞர்கள் உள்பட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்தியாவிலிருந்து சிறந்த நடிகருக்கான விருது நடிகர் குருசோமசுந்தரத்திற்கு வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருது மலையாளத்தில் வெளியாகி அமோக வரவேற்பைப் பெற்ற ‘மின்னல் முரளி’ படத்திற்காக அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கூத்துப் பட்டறையில் பயிற்சி பெற்ற இவர், கடந்த 2011-ம் ஆண்டு வெளியான ‘ஆரண்ய காண்டம்’ படத்தின் மூலம்சினிமாவில் அறிமுகமானார். இந்தப் படத்தை தொடர்ந்து, கடல், பாண்டிய நாடு, ஜிகிர்தண்டா, தூங்காவனம், கோஹினூர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
எனினும், கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘ஜோக்கர்’ படம் தான் இவரின் திறமையை வெளிக்கொண்டுவந்து மக்களிடம் கவனிக்க வைக்கும் நடிகராக அறிமுகப்படுத்தியது. ‘5 சுந்தரிகள்’, ‘கோஹினூர்’ உள்ளிட்ட மலையாளப் படங்களில் நடித்துள்ள இவர், ‘மின்னல் முரளி’ படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தின் மூலம் மலையாளம் தாண்டி மற்ற மொழி ரசிகர்களையும் திரும்பி பார்க்க வைத்தார். இந்நிலையில் தான் அவருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த விருது வழங்கும் விழா வரும் டிசம்பர் மாதம் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கிறது. ஆசிய கண்டத்தின் பல்வேறு நாடுகளை சார்ந்த பல்வேறு மொழி திரைத்துரையை சார்ந்தவர்களும் இதில் கலந்துகொள்கிறார்கள்.