எனக்கு 27 வயதாகிறது. நான்கு வயது பெண் குழந்தையின் அம்மா நான். என் குழந்தையிடம் நான் அளவுக்கு அதிகமாகக் காட்டும் பாதுகாப்பு உணர்வு, சரியா, தவறா என்ற குழப்பத்துக்கு விடை காணவே இதை எழுதுகிறேன்.
குழந்தை பருவத்தில் பாலியல் தொல்லை என்ற கொடூரத்தை எதிர்கொள்ள நேர்ந்த எத்தனையோ பேரில் நானும் ஒருத்தி. எங்கள் வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்தவர் அவர். மூன்று குழந்தைகளுக்கு அப்பா. அதில் கடைசி குழந்தை, என் வகுப்புத் தோழி. எனவே, நான் அவர் வீட்டில் சென்று விளையாடுவது வழக்கம். ஆனால், அவரால் நான் பாலியல் தொல்லைக்கு ஆளாகிறேன் என்று கூட அறிய இயலாத அந்த வயதில், என் குழந்தைமையை அவர் நாசமாக்கினார். விவரம் தெரிய ஆரம்பித்தபோது, அவரை பார்த்தாலே எனக்கு அருவருப்பாகவும், அச்சமாகவும் இருக்கும்.
என் பதின் வயதை அப்போதுதான் எட்டியிருந்தேன். உறவுக்கார இளம் பெண் ஒருவரால் ஒருமுறை பாலியல் தொல்லைக்கு ஆளானேன். ஏற்கெனவே அந்த பிரச்னையால் அரண்டிருந்த என்னை இந்தச் சம்பவம் இன்னும் அழுத்தத்தில் தள்ளியது. அதிலிருந்து, ஆண், பெண், பெரியவர், சிறியவர் என யாராக இருந்தாலும், அனைவரிடமிருந்தும் நான் விலகியிருக்க ஆரம்பித்தேன். இதனால் எனக்கு பள்ளி, கல்லூரியில்கூட நெருங்கிய நண்பர்கள், தோழிகள் என்று யாருமில்லை.
படிப்பை முடித்து, எனக்குத் திருமணமான பின்னரும்கூட, என்னுள் உறைந்துபோன அந்த கொடூர அனுபவங்களும், அது தந்த அச்சங்களும் என்னைவிட்டு அகலவில்லை. என் கணவரிடம் இதுபற்றியெல்லாம் எதுவும் பகிர்ந்ததில்லை. இந்நிலையில், நான் கருவுற்றபோது, பெண் குழந்தை பிறந்தால் இந்த சமூகம் என் குழந்தையையும் பாதுகாப்பாக வளரவிடாது என்பதால், ஆண் குழந்தையே பிறக்க வேண்டும் என்று எண்ணினேன் (ஆண் குழந்தைகளும் பாலியல் தொல்லைக்கு விதிவிலக்கல்ல என்பதை இப்போது செய்திகளில் படிக்கும்போது இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது). ஆனால் பெண் குழந்தை பிறந்தது. அப்போது என் மனதில் தோன்றிய எண்ணம் இதுதான்… ‘இவளை நாம் மிகப் பாதுகாப்பாக வளர்க்க வேண்டும், நமக்கு நேர்ந்த துர் அனுபவங்கள் இவளுக்கு நிகழவே கூடாது!’
இந்நிலையில், என் குழந்தை வளர வளர, நான் அதை பொத்திப் பொத்திப் பாதுகாக்க ஆரம்பித்தேன். யார் கையிலும் குழந்தையைக் கொடுக்கத் தயங்குவேன். அப்படியே கொடுத்தாலும், அந்த இடத்தை விட்டு விலகாமல், என் குழந்தை மீது இருந்து கண்ணை எடுக்காமல் கண்காணித்தபடியே இருப்பேன். நட்பு வட்டம், உறவினர்கள், குடும்பத்தினர் என எல்லோரும் என்னை, ‘என்ன ஓவரா பண்ணுற? எல்லாரும்தான் புள்ளை பெத்து வளர்க்குறாங்க… உன்னை மாதிரி லூஸாட்டம் இப்படி கண்கொத்திப் பாம்பா இருக்குறதில்ல…’ என்று திட்டிவிட்டார்கள். ஆனால், அவர்களுக்கு எல்லாம் எனக்கு நடந்ததும், நான் குழந்தையை கண்காணிப்பதற்கான காரணமும் தெரியாதே?! ‘அவ அப்படித்தான் ஓவர் புரொக்டக்ஷன் அம்மா’ என்று எனக்கு முத்திரை குத்தி, ‘எப்படியோ போ’ என்று விட்டுவிட்டார்கள்.
இந்நிலையில், கொரோனா சமயத்தில் என் குழந்தையை பள்ளியில் சேர்த்தோம். ஆனால் ஆன்லைன் க்ளாஸிலேயே படித்தாள். இந்த கல்வியாண்டில் அவள் பள்ளி செல்ல ஆரம்பித்தாள். என் பதற்றம், என்னை மனஅழுத்தத்தில் தள்ளியது. மகள் பள்ளிக்குச் செல்லும் பள்ளி பேருந்து, பள்ளி வளாகம், வகுப்பறை என அவள் பத்திரமாக இருக்க வேண்டுமே என்ற பதைபதைப்பு என்னிடம் அதிகமாக, அதை நான் அவள் வகுப்பாசிரியரிடமும் வெளிப்படுத்திவிட்டேன். அவர் என்னை பள்ளிக்கு அழைத்துப் பேசினார். ’குழந்தை முதல் முதலா ஸ்கூலுக்குப் போகும்போது எல்லா பேரன்ட்ஸுக்கும் பதட்டம் இருக்கும்தான். ஆனா, நீங்க எக்ஸ்ட்ரீமா இருக்கீங்க. தேவைப்பட்டா எங்க பள்ளி மனநல ஆலோசகரை நீங்க ஒருமுறை பார்க்குறீங்க்ளா?’ என்று கேட்க, நானும் சம்மதித்து சென்றேன்.
என் பிரச்னைகளை எல்லாம் கேட்டறிந்த பள்ளி மனநல ஆலோசகர், ‘உங்க பிரச்னையை புரிஞ்சுக்க முடியுது. ஆனா, நீங்க இப்படி ஓவர் கண்காணிப்புடன் இருக்கிறது, உங்க குழந்தை வளர வளர ஓவர் கண்டிப்பாவும் மாறும். அது உங்க பொண்ணோட சுதந்திரத்தை பறிக்கும். அவ இஷ்டப்பட்ட எதையும் செய்ய விடாமல், உங்க கண்பார்வையிலேயே அவளை வெச்சுக்க நினைப்பீங்க. அது ஒரு கட்டத்துல, உங்க பொண்ணுக்கு உங்க மேல வெறுப்பையும் ஏற்படுத்தலாம். பெண் குழந்தைகளை பொத்தி பொத்தி வளர்க்கத் தேவை இல்லை. பாலியல் தொல்லை பத்தி எஜுகேட் பண்ணி, அதை எதிர்கொண்டா எதிர்வினையாற்ற சொல்லிக்கொடுங்க. புகார் கொடுக்க சொல்லிக்கொடுங்க. தைரியமா இருக்க கத்துக்கொடுங்க. படிப்பு, வேலைனு அவங்க போக வேண்டிய தூரம் நிறைய. எல்லா இடத்துக்கும் உங்களால கூட போக முடியாது, போகவும் தேவையில்லை. அவங்களுக்கு நீங்க இதை மட்டும் கொடுத்துட்டா போதும் – தைரியம்’ என்றார்.
அவர் சொன்னதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் நடைமுறைப்படுத்த முடியவில்லை. இப்போதும் நான் என் குழந்தை பின்னால் கண்கொத்திப் பாம்பாகவே திரிகிறேன். என்னை நான் மாற்றிக்கொள்ள வேண்டுமா? எனில், எப்படி?