சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை முடக்கி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
மஹாராஷ்டிரா மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியில் உத்தவ் தாக்கரே, ஏக்நாத் ஷிண்டே தலைமையில் இரு அணிகள் செயல்பட்டு வருகின்றன. இரு அணியினரும் சிவசேனா கட்சியை சொந்தம் கொண்டாடி வருகின்றனர். இதில் ‘எங்களைத் தான் உண்மையான சிவசேனா என அறிவிக்க வேண்டும்’ என ஏக்நாத் ஷிண்டே தரப்பு தலைமை தேர்தல் ஆணையத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்து மனு அளித்தது.
இதனிடையே அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யக்கோரும் மனு விசாரணையில் இருப்பதால், இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும் வரை தேர்தல் ஆணையம், ஏக்நாத் ஷிண்டேவின் கோரிக்கையை பரிசீலிக்க கூடாது என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் உத்தவ் தாக்கரே மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றத்தின் யார் உண்மையான சிவசேனா என்று தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க எந்த தடையும் இல்லை என்று உத்தரவிட்டதோடு உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து அண்மையில் உத்தரவிட்டது.
இந்நிலையில் சிவசேனா கட்சியின் வில் அம்பு சின்னத்தை முடக்கி இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. எதிர்வரும் அந்தேரி தொகுதி இடைத்தேர்தலில் தனியாக சின்னங்களை தேர்வு செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்க: இருவரும் வாபஸ் பெறாததால் காங்கிரஸ் தலைமை தேர்தல் திட்டமிட்டபடி நடக்கும்-மதுசூதனன் மிஸ்டரி
Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM