“எய்ம்ஸ்க்காக எடப்பாடியார் ஒதுக்கிய நிலம் இங்கே உள்ளது, செங்கலைக் காட்டிய உதயநிதி எங்கே?” என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்திருக்கும் அறிக்கையில், “மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும் என்று அம்மாவும், எடப்பாடியாரும் தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தியதன் விளைவால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க 2015-ம் ஆண்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு 2019-ம் ஆண்டு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்தில் 37 அரசு மருத்துவமனைகள் இருந்தாலும், எய்ம்ஸ் மருத்துவமனை என்பது தமிழகத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பாக இருந்தது. தற்போது கட்டுமானப் பணி எப்போது தொடங்கும் என தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் அது குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெறுகின்றன.
எடப்பாடியார் வழிகாட்டுதலோடு வருவாய்த்துறை சார்பில் தேவையான 222 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, சுற்றுச்சுவர், சாலை அமைக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கிறது.
எடப்பாடியார் ஒதுக்கிய நிலம் இருக்கிறது, செங்கல் காட்டிய உதயநிதி இப்போது எங்கே என்று தென் மாவட்ட மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
செங்கலைக் காட்டியவரும், தற்போது செங்கோலை வைத்திருப்பவரும் இந்த ஒன்றரை ஆண்டுக்காலத்தில் அதைப் பற்றி பேச மறுப்பது ஏன்? மதுரைக்கு ஆய்வு செய்யவும் வரவில்லை.
மக்கள் பிரச்னைகளில் உதயநிதி கவனம் செலுத்துகிறாரா அல்லது கலைத்துறையில் கவனம் செலுத்துகிறாரா, ரெட் ஜெயன்ட் மூவிஸை உலக அளவில் எடுத்துச் செல்ல பாடுபடுகிறாரா என்று தெரியவில்லை.
மத்திய அரசுக்கு நீங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுக்க வேண்டும். மொத்த மதிப்பீடு 1,977 கோடியில் ஜைக்கா நிறுவனம் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கியிருக்கிறது. மீதியை வரும் அக்டோபர் 26-ம் தேதிக்குள் வழங்குவதாகக் கூறியிருக்கிறது.
இதில் ஜைக்கா தரும் 82 சதவிகித நிதியுடன் மத்திய அரசு 12 சதவிகித நிதி தர முடிவெடுத்திருக்கிறது. இது நல்ல செய்தி.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி, நிலம் ஒதுக்கி சாலை அமைத்து சுவர் எழுப்பப்பட்டிருக்கிறது. கட்டடப் பணிகள் தொடங்கும் நல்ல செய்தி எப்போது வரும் என்பதே தென் மாவட்ட மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. தேர்தல் நேரத்தில் செங்கலைக் காட்டிய உதயநிதி, கட்டடம் கட்ட செங்கலை எடுத்து வைப்பாரா என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது.
தற்போது திட்டங்களுக்கு நிலம் எடுப்பது அரசுக்கு சவாலாக உள்ளது. ஆனால், எய்ம்ஸை பொறுத்தவரையில் எந்தவொரு எதிர்ப்புமில்லாமல் 222 ஏக்கர் நிலத்தை மத்திய அரசிடம் ஒப்படைத்தது எடப்பாடியார் அரசு” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.