சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழை நீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
சென்னையில் மாநகராட்சி சார்பில் மழை நீர் வடிகால் அமைத்தல் மற்றும் கால்வாய்களை தூர்வாருதல், நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணித்துறை சார்பில் பக்கிங்காம் கால்வாய்களை தூர்வாரும், மாநகராட்சி சார்பில் ஓட்டேரி கால்வாய், மாம்பலம் கால்வாய் ஆகியவற்றில் தூர் வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
வடகிழக்கு பருவமழை இந்த மாதம் 15 ஆம் தேதிக்கு பிறகு தொடங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கு முன்பாக பணிகளை முடிக்க வேண்டும் என்பதால் இறுதிக்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சென்னையில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் மழைநீர் வடிகால் பணிகள் குறித்து தொடர்ச்சியாக பல்வேறு ஆய்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலை துறை, நீர்வளத்துறை மற்றும் பொதுப்பணி துறை ஆகிய துறைகள் சார்பில் சென்னையில் மேற்கொண்டு வரும் பணிகள் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என் நேரு, ஏ. வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, தலைமைச் செயலாளர் இறையன்பு, நகராட்சி நிர்வாக துறை செயலாளர் சிவதாஸ் மீனா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தொடர்ந்து கடந்த சில நாட்களாக பல்வேறு முறை பணிகளை ஆய்வு செய்து பணிகளை விரைவுப்படுத்தி அக்டோபர் மாதம் 15 ஆம் தேதிக்குள் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதனிடையே பருவமழைக்கு முன்னதாக முடிக்கப்பட்ட மற்றும் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.8) நேரில் ஆய்வு செய்தார். இதன்படி அசோக் நகர், கொளத்தூர் வேலவன் நகர். அம்பேத்கர் கல்லூரிச் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பேசின் பாலம், வால்டாக்ஸ் சாலை, ரிப்பன் மாளிகை, என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.