சென்னை: சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார்.
சென்னையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் அமைத்தல், நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கால்வாய்களை தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்.8) நேரில் ஆய்வு செய்தார். இதன்படி அசோக் நகர், கொளத்தூர் வேலவன் நகர். அம்பேத்கர் கல்லூரிச் சாலை, புளியந்தோப்பு நெடுஞ்சாலை, பேசின் பாலம், வால்டாக்ஸ் சாலை, ரிப்பன் மாளிகை, என்எஸ்சி போஸ் சாலை உள்ளிட்ட பல இடங்களில் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். ஆய்வுக்குப் பிறகு அமைச்சர் கே.என்.நேரு கூறும்போது, “சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் 85 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. மழைநீர் தேங்கினால் உடனடியாக மோட்டார் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
அமைச்சர் சேகர்பாபு கூறும்போது, “சென்னையில் ரூ.4,500 கோடியில் மழைக்கால வெள்ளத் தடுப்பு பணிகள் நடைபெறுகிறது. மக்கள் சிறிது சிரமம் அடைந்தாலும், நிரந்தரத் தீர்வைப் பெற தற்போது பணிகள் நடைபெறுகிறது. 10 நாட்கள் மழை பெய்யாமல் இருந்தால் அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துவிடும்” என்றார்.
இதனிடையே, “குறைந்தபட்சம் 15 நாட்கள், அதிகபட்சம் ஒரு மாதத்திற்குள் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவுபெறும். எப்படிப்பட்ட மழை வந்தாலும், அதை சமாளிக்கும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்போது நடைபெற்று வரும் பணிகள் திருப்திகரமாக உள்ளது” என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.