அகில இந்திய காங்கிரஸ் தலைவருக்கான தேர்தல் வரும் 17-ம் தேதி நடைபெறவிருக்கிறது. தலைவர் தேர்தலில் போட்டியிட மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்க்கே, சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். இதில், கே.என்.திரிபாதி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தலைவர் பதவிக்குப் போட்டியிடுவார் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அசோக் கெலாட் திடீரென்று பின்வாங்கினார். காங்கிரஸ் அதிருப்தி குழு என அழைக்கப்படும் ‘ஜி23’-ல் இடம்பெற்றிருந்த முன்னாள் மத்திய அமைச்சர் சசி தரூருக்கும், மேலிடத்தின் ஆசியுடன் மல்லிகார்ஜூன கார்கே இடையையும் நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சசி தரூர், தனது வாக்குறுதிகள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டிருக்கிறார். இருவரும் மாநிலங்கள்தோறும் பயணம் மேற்கொண்டு காங்கிரஸ் கட்சியினரிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள்.
இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸ் கட்சியினரிடம் ஆதரவு திரட்ட சசி தரூர் கடந்த வியாழக்கிழமை விமானம் மூலம் சென்னை வந்தார். அவரை வரவேற்க கே.எஸ்.அழகிரி மற்றும் மாவட்டத் தலைவர்கள் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மூத்த தலைவர்கள், துணைத்தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் யாரும் வரவேற்கச் செல்லவில்லை. மாநிலப் பொதுச்செயலாளர் அருள் பெத்தையா மட்டுமே சசி தரூர் உடன் இருந்தார். முன்னதாக, சசி தரூருக்கு ஆதரவு அளிப்பதாக ப.சிதம்பரம் மகனும் சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் தெரிவித்திருந்தார். அதன்படி, அவர் ஆதரவாளர்கள் 150 பேர் மட்டுமே சசி தரூருடன் இருந்தனர். அவர்களுடனே கிண்டியில் உள்ள ராஜீவ் காந்தி சிலைக்கும், தொடர்ந்து காமராஜர் சிலைக்கும் மரியாதை செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த சசி தரூர், “தமிழக காங்கிரஸ் கட்சியினரை நேரில் சந்தித்து ஆதரவு கேட்க வந்திருக்கிறேன். சரிந்திருக்கும் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவேன், புத்துயிர் கொடுப்பேன். அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவும், இளைஞர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கிறது. இதில் நான் வெற்றி பெற்றால் இளம் இந்தியாவை உருவாக்குவேன். எனக்குப் பிரசாரம் மேற்கொள்ள, நேரம் குறைவாக இருக்கிறது. இதனால் நேரடியாகவும், தொலைபேசி மூலமாகவும் என பல விதங்களில் ஆதரவு கோரிவருகிறேன். காந்தியின் குடும்பம் கார்கேவுக்கு ஆதரவு அளித்து வருவதாக சமூக வலைதளங்களில் சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால் காந்தி குடும்பம் இதுவரை அதிகாரபூர்வமாக யாருக்கு ஆதரவு என்று தெரிவிக்கவில்லை” என்றார்.
இதையடுத்து, தமிழக காங்கிரஸ் தலைமையிடமான சத்திய மூர்த்தி பவனுக்கு இரவு 8 மணியளவில் நிர்வாகிகளைச் சந்தித்து ஆதரவு திரட்டச் சென்றார். அங்கேயும் மூத்த தலைவர்கள் யாரும் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அப்போது, அங்கே இருந்த மகளிர் அணியினர் மற்றும் சிதம்பரம் ஆதரவாளர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டார். சசி தரூருக்கு சிதம்பரம் ஆதரவாளர்கள் ரோஜாப் பூ மாலை அணிவித்தார்கள். பின்னர், இரவோடு இரவாகச் சென்னையிலிருந்து டெல்லி புறப்பட்டுச் சென்றார். சசி தரூருக்கு அவரது சொந்த தொகுதியான திருவனந்தபுரத்திலேயே எதிர்ப்புகள் இருந்து வந்தன. இந்தச் சூழலில், தமிழக காங்கிரஸாரும் சசி தரூரை நேரடியாகவே புறக்கணித்திருக்கிறார். இது குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மூத்த நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “தலைவர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வாக்குச் சேகரிக்க வந்தால் அவர்களுக்குத் தேவையான வரவேற்பை மாநில காங்கிரஸ் கமிட்டி செய்ய வேண்டும் என காங்கிரஸ் தேர்தல் அதிகாரி மதுசூதன் மிஸ்ட்ரி தெரிவித்திருக்கிறார்.
அந்த வகையில், கடந்த 4-ம் தேதி சசி தரூர், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரியிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு `சென்னை வருகிறேன்’ என்று கூறிவிட்டார். அழகிரியும், `வாருங்கள்’ என்று கூறினார். இரவு 8 மணிக்கு நிர்வாகிகள் சந்திப்புக்கு நேரம் குறித்துக் கொடுத்ததும் கே.எஸ்.அழகிரிதான். ஆனால், சசி தரூர் சென்னை வந்தபோது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி போதிய வரவேற்பைக் கொடுக்கவில்லை. மூத்த தலைவர்கள் யாரும் வரவேற்க வரவில்லை. மாநில நிர்வாகிகளிடமும் கே.எஸ்.அழகிரி இது குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால், திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னையைச் சேர்ந்த சிதம்பரம் ஆதரவாளர்கள் 150 பேர் திடீரென வரவழைக்கப்பட்டார்கள். சசி தரூர் வருகை குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் எந்த முன்னறிவிப்பும் செய்யாததே இந்தப் பிரச்னைக்குக் காரணம்” என்றனர்.
சசி தரூர் வருகையைத் தொடர்ந்து வரும் 13-ம் தேதி மல்லிகார்ஜுனாவும் ஆதரவு திரட்ட தமிழகம் வரவிருக்கிறார். மல்லிகார்ஜூன கார்கேவுக்கு கட்சியின் மேலிடத் தலைவர்கள் பலரின் ஆதரவு இருக்கிறது. தலைவர் பதவிக்கு அசோக் கெலாட், திக் விஜய் சிங், சசி தரூர், கே.என்.திரிபாதி ஆகியோர் காய் நகர்த்திய நிலையில், கடைசியாக களமிறங்கியவர் மல்லிகார்ஜூன கார்கே. 50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருக்கும் அவருக்கு சோனியா காந்தி குடும்பத்தின் மறைமுக ஆதரவு இருப்பதாலே அசோக் கெலாட்டும், திக் விஜய் சிங்கும் போட்டியிலிருந்து விலகினார்கள் என்றும் கூறப்படுகிறது. சசி தரூரை ஏமாற்றிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மல்லிகார்ஜுனா கார்கேவுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கத் திட்டமிட்டிருப்பதாகக் கூறுகிறார்கள் அந்தக் கட்சியினர்.