தாமதமாக வந்த டெலிவரி ஊழியரை ஆரத்தி எடுத்து வரவேற்ற கஸ்டமர்..!

உணவு டெலிவரி செய்யும் தொழில் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான ஒரு வேலையாக உள்ளது. இன்றைய டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் உணவு டெலிவரி என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் அனைவருமே வீடுகளிலேயே முடங்கி இருந்த நிலையில், உணவு டெலிவரி செய்ய இதுபோன்ற செயலிகளே பெரியளவில் உதவின.

இந்தியாவில் ஸ்விக்கி, சொமோட்டோ உள்ளிட்ட பல நிறுவனங்கள் உணவு டெலிவரி செய்து வருகிறது. முதலில் நகரங்களில் மட்டுமே இருந்த இந்த சேவை இப்போது மாநிலத்தில் இருக்கும் அனைத்து நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. டெலிவரிக்கு சிறு தொகை மட்டுமே செலுத்த வேண்டும் என்பதாலும் உணவு நேரடியாக வீட்டிற்கு வந்துவிடுகிறது என்பதாலும் பொதுமக்கள் பலரும் உணவு டெலிவரி சேவையை அதிகம் விரும்புகின்றனர். மேலும் பலருக்கு வெளியில் செல்ல நேரம் இல்லாததால் அவர்கள் வீட்டில் இருந்தபடியே உணவுகளை உணவகங்களில் ஆர்டர் செய்கிறார்கள். ஹோட்டல்களில் உணவு தொடங்கி மளிகை பொருட்கள், மருந்து பொருட்கள், பேக்கேஜ்கள் என அனைத்தும் இப்போது வீட்டில் இருந்தபடியே ஆர்டர் செய்து வீட்டு வாசலிலேயே பெற்றுக்கொள்ளும் அளவுக்கு வசதி பெருகிவிட்டது. இப்படி மக்களுக்கு பல்வேறு சவுகரியங்களும் கிடைப்பதால் இத்தகைய செயலியை பயன்படுத்தி ஆர்டர் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டேதான் வருகிறது.

அதேநேரம் டெலிவரி ஊழியர்களுக்கும், நிறுவனங்களுக்கும் இடையே சில காலமாகவே பிரச்சினை இருந்துவருகிறது. அதேவேளையில் போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பல்வேறு புறக்காரணிகளால் குறிப்பிட்ட நேரத்திற்குள் உணவு கொண்டுவராத டெலிவரி ஊழியர்களுக்கும், கஸ்டமர்களுக்கும் அவ்வப்போது சிறு சிறு உரசல்களும், முரண்பாடுகளும் இருந்துவருவது உண்மையே. இந்தநிலையில் காலதாமதமாக உணவு கொண்டுவந்த டெலிவரி ஊழியரை ஆரத்தி எடுத்து கஸ்டமர் வரவேற்கும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகிவருகிறது.

சக்கரத்தில் கோளாறு: வந்தே பாரத் ரயில் சேவை 3ஆவது நாளாக பாதிப்பு!

டெல்லியில் சொமோட்டோ செயலி மூலம் உணவு ஆர்டர் செய்த சஞ்சீவ்குமாருக்கு 1 மணி நேரமாகியும் உணவு கிடைக்கவில்லை. வெகுநேரமாக காத்திருந்த சஞ்சீவ்குமாரும், அவரது குடும்பத்தாரும் காலதாமதமாக உணவு கொண்டு வந்த டெலிவரி ஊழியரை ஆரத்தி எடுத்து,

‘ வாங்க, வாங்க… உங்களுக்காகத்தான் காத்திருக்கிறோம்’ என வரவேற்றிருக்கின்றனர். இதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.

இது குறித்து சஞ்சீவ்குமார் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், “டெல்லி டிராஃபிக் இருந்தபோதும், இந்த ஆர்டருக்காகத்தான் காத்திருந்தோம். நன்றி சொமோட்டோ’’ என்று பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவை 2 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்து வைரலாக்கி வருகின்றனர். தாமதமாக வந்தவரிடம் குரலை உயர்த்தாமல் ஆரத்தி எடுத்து வரவேற்ற சம்பவம் நெகிழ்ச்சியாக உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.