முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “தி.மு.க ஆட்சியில் பொய் சொல்வதே ஒரு வேலையாக ஆகிவிட்டது. மழைநீர் வடிகால் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளங்களில் எல்லாம் மழை நீர் தேங்கியிருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பொது இடங்களில் தேங்கியிருக்கும் மழை நீரில் கொசுக்கள் உற்பதியாவதால் டெங்கு, ஃப்ளூ, டைபாய்டு போன்ற காய்ச்சல்கள் சர்வ சாதாரணமாக பரவ வாய்ப்பிருக்கிறது.
வடகிழக்குப் பருவமழை தொடங்கவிருக்கும் முன்பே நிலைமை இப்படி இருக்கிறது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு மிக அதிகமாக மழை பெய்யும் என்று எச்சரிக்கின்றனர். தி.மு.க அரசு 90 சதவிகிதம், 95 சதவிகிம் மழை நீர் வடிகால் பணிகளை முடித்து விட்டதாகப் பொய் சொல்கிறது. ஆனால் போர்கால அடிப்படையில் பணிகள் முடித்திருக்க வேண்டும். இந்த ஆட்சியில் பொய், பித்தலாட்டம் மோசடிதான் அதிகமாக இருக்கிறது.
எங்கள் ஆட்சியில் வொர்க் மோர், டாக் லெஸ் என்பதுதான், ஆனால் இந்த ஆட்சியை பொருத்தவரை டாக் மோர், வொர்க் லெஸ். ஜெயலலிதா எழில்மிகு சென்னை என்ற ஒரு சிறந்த திட்டத்தைத் தீட்டி பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தார். ஆனால் இவர்கள் சிங்கார சென்னை என்று சொல்கிறார்கள். இது சிங்காரச் சென்னையாகவா இருக்கிறது? ஒரு டெங்கு சென்னையாக, காலரா, ஃப்ளூ சென்னையாகத் தான் இருக்கிறது. தி.மு.க-வினர் லேபிள் ஒட்டும் பணியைத்தான் செய்து வருகிறார்கள். தி.மு.க-வின் வேலை என்பது நாங்கள் அடிக்கல் நாட்டி முடித்தப் பணியைத் திறந்து வைப்பார்கள்” என்றார்.