திமுக தொண்டர்களால் களைகட்டியது அண்ணா அறிவாலயம்: தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் தேர்வாகிறார்

சென்னை: திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின் தேர்வாகிறார். அதேபோல, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோரும் தேர்வாகின்றனர். திமுக நிர்வாக ரீதியான 15-வது உட்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே, ஒன்றியம், நகரம், நகரியம், பேரூர், பகுதி, மாவட்டம், மாநகரச் செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்று, தேர்வு செய்யப்பட்டவர்கள் அறிவிக்கப்
பட்டுவிட்டனர்.

நாளை பொதுக்குழு: புதிய நிர்வாகிகள் பங்கேற்கும் பொதுக்குழுக் கூட்டம் வரும் 9-ம் தேதி சென்னை அமைந்த கரையில், பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது. இப்பதவிகளுக்குப் போட்டியிடுவோரிடமிருந்து அக்டோபர் 7-ம் தேதி விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்றும், இப்பதவிகளுக்கு தலைமை செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பொதுக்குழு உறுப்பினர்கள் 5 பேர் முன்மொழிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் நேற்று வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் போட்டியிட வலியுறுத்தி, அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் போட்டி போட்டுக்கொண்டு விருப்ப மனுக்களை அளித்தனர். அதேபோல, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் சார்பிலும் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இதையொட்டி, கட்சி நிர்வாகிகள், தொண்டர்களால் அண்ணா அறிவாலயம் களைகட்டியது. திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பகல் 12.10 மணியளவில் வேட்புமனு தாக்கல் செய்தார். அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள், வேட்புமனுவைப் பெற்றுக்கொண்டனர். அப்போது, நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, கனிமொழி, ஆ.ராசா, சட்டப்பேரவை உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

நினைவிடங்களில் மரியாதை வேட்புமனு: தாக்கல் செய்வதற்கு முன்பாக, முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடம், கருணாநிதி நினைவிடத்தில் மலர்கள் தூவி, மரியாதை செலுத்தினார். அதேபோல, கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியின் படத்துக்கும் மலர்கள் தூவி மரியாதை செய்தார். திமுக தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் 2-வது முறையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டிஆர்.பாலு ஆகியோரும் வேட்புமனு தாக்கல் செய்தனர். பின்னர், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

திமுக தலைவராக முதல்வர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாள ராக துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு ஆகியோர் மனு தாக்கல் செய்த நிலையில் மாலை 5 மணிவரை வேறு எவரும் இவர்களை எதிர்த்து மனுதாக்கல் செய்யாததால் இவர்கள் மூவரும் போட்டியின்றித் தேர்வாகின்றனர். நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் தணிக்கைக் குழு உறுப்பினர்கள், துணைப் பொதுச் செயலாளர் ஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளனர். மேலும், பொதுக்குழுவில் பல்வேறு முக்கியத் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறவுள்ள புனித ஜார்ஜ் பள்ளியில் திமுக தலைவரும், முதல் வருமான மு.க.ஸ்டாலின் நேற்று காலை ஆய்வு மேற்கொண்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.